• Welcome to TamilsGuide
செய்திகள் 1

என் மனதில் நின்ற கதாபாத்திரங்கள்! பொன்னாத்தா!

சினிமா

மலைச்சாமியின் மனைவி!
எவனோ ஊர்பேர் தெரியாதவனுக்கு மடியை விரித்து,வயிற்றை நிரப்பிக் கொண்டவள்!
அவள் பெற்ற அவமானத்தை சுமக்கிறான் தந்தை!அந்த அவமானத்தை தன்னுடைய மருமகனிடம் இறக்கி வைத்து குடும்ப கௌரவத்தை, 'காப்பாத்து சாமி',என காலில் விழுந்து கதறி அழுகிறான்.
தாய்மாமன் தொட்ட காலை செருப்பே அணியாமல் மரியாதை செலுத்துகிறான்,மருமகன்.மாமனுக்கு கொடுத்த வாக்கையும் கடைசி வரை காப்பாற்றுகிறான்;எவனுக்கோ பிறந்த பிள்ளையை தன் பிள்ளையாக ஏற்று, அவளுடைய தாயையும் தன் மனைவியாக ஏற்றுக்கொள்கிறான்.
மாமனுக்காக, குடும்ப கௌரவத்துக்காக அவளை மனைவியாக ஏற்றுக்கொண்டானேத் தவிர, அவளை கடைசி வரையில் தொடக்கூடாது என்கிற வைராக்கியத்தையும் மனதிற்குள் ஏற்றிக் கொள்கிறான்.
பொன்னாத்தாளுக்கோ, சிறுவயசுல தான் செஞ்ச தப்புக்கு வாழ்க்கை முமுக்க எனக்கு தண்டனையா?இப்படியொரு நரகவேதனையில் தள்ளிய செத்துப் போன தன்னுடைய தகப்பனையும் வாய்க்கு வந்தபடி திட்டுகிறாள்.
தன்னை ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்கிறான் என்கிற ஆத்திரமும், அவமானமும் புருஷன் மீது அவளுக்கு அளவுக்கு அதிகமாக வெடித்து கெளம்புது.
புருஷனாலயே புறக்கணிக்கப்படுவதை எந்த மனைவியாலும் ஏற்றுக் கொள்ளவே முடியாது.அதனால்,அவளுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் புருஷனை அவமானப்படுத்துகிறாள்.

காமத்தின் வெப்பத்தில் கொதிப்பவளுக்குத்தான் அதன் வலியும் வேதனையும் தெரியும்;புரியும்.பருவத்து வயதில், அவள் ஒரே ஒரு முறைதான் தவறு செய்தாள்.அந்த வயதிலிருந்து, அவள் பாட்டி ஆகும் வரையில் புருஷன்சுகத்தையே அனுபவிக்கவில்லை என்பதும் கொடுமைதானே!அதனால்தான், அவள் புருஷனைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஏசுகிறாள்;கண்டபடி பேசுகிறாள்;அவமானப்படுத்துகிறாள்.
இப்படியிருக்கும் சூழ்நிலையில், புருஷனுக்கு தன் மகள் வயசுப் பெண்ணோடு தொடுப்பு இருப்பது தெரிந்தால் சும்மா இருப்பாளா?
ஊரைக் கூட்டுகிறாள்;ஒப்பாரி வைக்கிறாள்;அவளை கண்டபடி ஏசுகிறாள்;துடைப்பக்கட்டையாலயே அடிக்கிறாள்.
அவளுடைய கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், அவளுடைய ஆத்திரமும் கோபமும் நியாயம் என்றே நமக்குப்படும்.
மலைச்சாமியை கட்டியபிறகு வேறு எந்த ஆம்பளையையும் நினைக்காதவள்தான் பொன்னாத்தா.
கடைசிவரையில் தன்னுடைய பொண்டாட்டியா மனசளவில் அவளுடைய புருஷன் மலைச்சாமி ஏத்துக்கவேயில்லை.
கடைசியிலே அவளோட குடிசையிலே சாகக்கிடக்கிறான் தன் புருஷன் என்பதை நினைக்கும் பொழுது, அவளால் அந்த அவமானத்தை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
இக்கதாபாத்திரத்தை படம் முழுக்க பார்த்தாலும் 10 காட்சிகளுக்கு மேல் இருக்காது.ஆனால்,கதை முழுவதும் படர்ந்து இருக்கும்.அதுதான் இக்கதாபாத்திரத்தின் கனம்.
இக்கதாபாத்திரம் வடிவுக்கரசிக்கு அப்படியொரு பொருத்தம்.தன்னுடைய அபார நடிப்பாற்றலால், இக் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருப்பார்,வடிவுக்கரசி.
பொன்னாத்தா என்றென்றும் தமிழ்சினிமாவில் நிலைத்து நிற்பாள்!

சே மணிசேகரன்

Leave a Reply