• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மலைச்சாமி

சினிமா

தமிழ்சினிமாவில் என் மனதில் நிறைந்த கதாபாத்திரங்களின் வரிசையில், மலைச்சாமி!
முதலில்,பிள்ளையார் சுழி( சிவாஜி,'கணேசன்',)போட்டு ஆரம்பிக்கிறேன்.
முதல்மரியாதை படத்தில் வரும் பெரியவரைப் போல் கிராமத்தில் எவரையேனும் நாம் காண முடியுமா?என ஆச்சர்யப்படும் அளவிற்கு,இக்கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
ஊர் பேர் தெரியாத எவனோ ஒருவனிடம் தன் மடியைக் கொடுத்து மானத்தை இழந்த தன் மகளுக்காக, தன் சகோதரியின் மகனின்(மருமகன்)காலில் விழுந்து, 'நம் குடும்பத்தை காப்பாத்தற குலசாமி நீதாம்பா,அவளுக்கு வாழ்க்கையைக் கொடு',என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டது முதல், தன் தாய்மாமன் தொட்ட காலில் செருப்பே அணியாமல், வைராக்கியம் புடிச்ச வைரம் பாய்ஞ்ச நெஞ்சுக்கு சொந்தக்காரர் இந்த மலைச்சாமி எனும் பெரியவர்.

எந்தக் காலிப்பயலுக்கோ பிறந்த குழந்தையை, தாய்மாமன் சொல்லுக்காக தன் குழந்தையைப் போல் வளர்த்து ஆளாக்குகிறார்.ஊர் உலகத்துக்கே தெரியாமல் நெஞ்சுக்குள்ளேயே புதைத்துக் கொள்கிறார்.
சத்தியம் கொடுப்பது பெரிதல்ல;அந்த சத்தியத்தை தன்  உயிர் உள்ளவரை காப்பவனே,சத்தியசீலன்.
ஊருக்குதான் அவள் அவருக்கு பொண்டாட்டி.ஆனால்,அவரின் விரல்நகம் கூட அவள் மீது பட்டதில்லை.அதனால்,அவள் உடம்புக்குள்ளே எழும் காமத்தின் வெப்பத்தை அக்னி துண்டுகளாக்கி அவர் மீது அவ்வப்போது வீசி எறிந்து கொண்டேயிருக்கிறாள்.
புயலோடு குடும்பம் நடத்திக்கொண்டிருந்தவருக்கு, வீசும் தென்றலாக வருகிறாள்,குயிலு.
அவரைப் பற்றி அவள் முழுமையாக அறிந்த பிறகு, அவளுக்கு அவர் மீது கரிசனம்.
காரை வீட்டில் இருந்தாலும் மூக்கை சிந்திய கையாலயே சோத்தைப் போடுபவள் பொண்டாட்டி.
குடிசையிலே வாழ்ந்தாலும்,சுத்தத்துக்கே சொந்தக்காரியாக நிக்கிறாள்,குயிலு.குடிசையில இருக்கற மண்சட்டி கூட பொன்சட்டியா மின்னுது.அவளுடைய சுத்தத்தைப் பாத்தா பசியில்லாதவனுக்கும் பசி வந்துருமே.இது வரையில் உப்பு,புளி,காரம் சுவையே அறியாத மலைச்சாமிக்கு ,இவளோட சுத்தத்தையும் மீன் குழம்பின் ருசியையும் கண்டு வட்டி வட்டியா வாங்கி திங்கிறார்.
அதுல பெருசுக்கு சப்புக்கட்டு வேற இப்படி,'நா எனக்காக சாப்பிடல புள்ளே,ஒனக்கு வவுறு வலிக்கக்கூடாது பாரு,அதுக்காகத்தேன்',என சொல்லும் பொழுது முதிர்ந்த வயசு  தெரியல,அஞ்சு வயசு குழந்தையே என் கண்ணுக்கு தெரிஞ்சுது.
காதலுக்கு வயசுல்லாம் தெரியுமா,என்ன?
காதலைப் பற்றி ரஷ்ய எழுத்தாளர் இவான் துர்கனேவ்,'காதல் வயது தொடர்பு உடையதல்ல.ஆன்மாவுடன் தொடர்புடையது.காதல் வாழ்வின் ஓர் அங்கமல்ல;காதலே வாழ்வின் முழுமை.நிராகரிப்பின் உச்சத்திலும்,அவமானத்தின் கீழ்மையிலும் கூட காதலின் புனிதத்தைக் காக்க முடியும்',என்கிறார்.
தனது குடும்ப கௌரவத்தை காப்பாற்றியவளுக்காக தன் உயிரின் கடைசித் துளியை கையில் பிடித்து வைத்திருக்கும் அந்த மலைச்சாமி எனும் பெரியவர் என்றென்றும் என் மனதில் வாழ்ந்து கொண்டேயிருப்பார்.
மலைச்சாமி எனும் பெரியவரை படைத்திட்ட எழுத்துலக பிரம்மா ஆர்.செல்வராஜ் அவர்களுக்கும் அந்த மலைச்சாமியை திரையில் நடமாட விட்ட இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும் என்றென்றும் நன்றி.
சே மணிசேகரன்

 

Leave a Reply