• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தாஜ்மகால் தேவையில்லை அன்னமே

சினிமா

தமிழ்த் திரையுலகில் தல எனப்போற்றப்படும் அஜித்குமார் அறிமுகமான திரைப்படம் " அமராவதி" ஆகும். இப்படம் 1993 ல் செல்வா இயக்கத்தில் வெளிவந்தது. இசையமைத்தவர் பால பாரதி பாடல்கள் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள். இத்திரைப்படம் வணிகரீதியாக வெற்றியடையவில்லை என்றபோதிலும் பாடல்கள் அனைத்தும் பிரபலமானவை. அவற்றில் ஒரு பாடலான "தாஜ்மகால் தேவையில்லை அன்னமே" என்ற பாடலை இன்று காண்போம்.
காதலுக்குச் சின்னம் தாஜ்மகால் என்று பலகாலமாகச் சொல்லிவருகிறோம். காதலிப்பவர்கள் பரிசாகத் தாஜ்மகாலை கொடுப்பதையும் காண்கிறோம். ஆனால் கவிஞர் சற்று மாற்றி சிந்திக்கிறார். தாஜ்மகால் மட்டுமல்ல காடும் மலைகளும் காதலின் சின்னங்கள் தான் என்கிறார். ஆமாம் இது உண்மை தானே, அழகு கொஞ்சும் சொர்க்கம் மிஞ்சும் கிராமத்து காதலுக்கு காடும் மலையும் தானே சின்னமாக இருக்க முடியும்.
"தாஜ்மஹால் தேவை இல்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே"
உலகம் முடிந்தாலும் தொடரக்கூடிய ஒரே உறவு காதல் மட்டுமே. காதலர்கள் ஏழேழு பிறவிக்கும் நீ வேண்டும் என்று தானே சொல்லிக்கொள்கிறார்கள் அதைத்தான் கவிஞரும் எழுதியுள்ளார்
"இந்த பந்தம் இன்று வந்ததோ
ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
உலகம் முடிந்தும் தொடரும் உறவு இதுவோ"
இந்த மண்ணும் இந்த விண்ணும் ஒருநாள் அழிந்து போகலாம் ஆனால் அழியாதது காதல் என்கிறார். அவைகளையும் தாண்டி நிலைக்கும் படியானது காதல். அழியாச் செல்வம் கல்வி என்பார்கள். அழியாத செல்வம் காதலும் ஆகும் என்கிறார். இத்தகு சிறப்பு வாய்ந்த நமது காதலை எதிர்வரும் சமூகம் கொண்டாடும் என்று எழுதுவது கவிஞரின் வருங்காலச் அறிவுச் சிந்தனையைக் காட்டுகிறது.
"பூலோகம் என்பது பொடியாகி போகலாம்

பொன்னாரமே நம் காதலோ பூலோகம் தாண்டி வாழலாம்
ஆகாயம் என்பது இல்லாமல் போகலாம்
ஆனாலுமே நம் நேசமே ஆகாயம் தாண்டி வாழலாம்
கண்ணீரிலே ஈரமாகி கரை ஆச்சி காதலே
கரை மாற்றி நாமும் வெல்ல கரை ஏற வேண்டுமே
நாளை வரும் காலம் நம்மை கொண்டாடுமே"
இறுதிச் சரணங்கள் தான் இப்பாடலின் மூலம் இச்சமூகத்திற்கு கவிஞர் தரும் சவுக்கடி.  இந்த சமூகம் கொஞ்சநாளே வாழக்கூடிய வண்டுகளின் காதலைக் கொண்டாடுகிறது ரசிக்கிறது ஆனால் ஆண்களும் பெண்களும் காதல் கொண்டு விட்டால் அது தவறு தகாத செயல் குடும்பத்திற்கு ஒத்துவராது என்று முட்டுக்கட்டை போடுகிறார்கள். இன்றைக்கும் இதே நிலை நீடிப்பதைக் காண முடிகிறது. 
"சில் வண்டு என்பது சில மாதம் வாழ்வது
சில் வண்டுகள் காதல் கொண்டால் 
செடி என்ன கேள்வி கேட்குமா
வண்டு ஆடும் காதலை கொண்டாடும் கூட்டமே
ஆணும் பெண்ணும் காதல் கொண்டால் அது ரொம்ப பாவம் என்பதா" 
இந்தப் பூமியில் காதலித்துச் சேர்ந்து வாழாதவர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர்,இறந்தும் போயினர். அவர்களுக்கும் சேர்த்து நாம் வாழ்வோம் என்று காதலன் காதலிடம் சொல்வதாக கவிஞர் கவிதை அமைக்கிறார். இவ்வரிகளை காதலிக்கும் ஒவ்வொரு ஆடவனும் தன் காதலியிடம் சொல்ல வேண்டும். அவர்களுக்கும் சேர்த்து வாழ வேண்டும். காதலைக் கொண்டாட வேண்டும். வெறும் காமத்திற்காக மட்டுமல்லாமல் அன்பிற்காக.
இப்பாடலை எழுதும் போது நிச்சயம் கவிஞர் குதூகலமாகத்தான் எழுதியிருக்க வேண்டும். ஏனெனில் அவரும் காதலித்தவர்தானே. இப்பாடைக் கேட்கும் காதலிக்காத ஒவ்வொருவருக்கும் காதல் செய்தே ஆகவேண்டும் என்ற உணர்வை கட்டாயம் வரவழைக்கும்.எனக்கு வரவழைத்தது‌.
இப்பாடலை S.P.பாலசுப்ரமணியம் மற்றும் S.ஜானகி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

பூபாலன் வைரமுத்து
 

Leave a Reply