• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சம்பந்தனை ஊழல் பேர்வழியாக காட்ட சுமந்திரன் முயற்சி

பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஒரு ஊழல் பேர் வழியாக காட்ட முனைந்தால் அது பிழை. சம்பந்தன்தனது முதுமை காரணமாக பதவி விலக விரும்பினால் அவர் விலக முடியும். அது அவருடைய முடிவு என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
  
மன்னாரில் நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் இலங்கையில் இடம் பெறும் ஊழல் மோசடிகள் தொடர்பாக இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் நீண்ட காலமாக பாராளுமன்றம் செல்லவில்லை.ஆனால் அவர் சம்பளம் எடுக்கின்றார்.அவருக்கான சலுகைகள் கிடைக்கிறது.இது ஊழல் இல்லையா?என தனது கருத்தை முன் வைத்துள்ளார்.

என்னை பொறுத்த வகையில் பாராளுமன்றம் எல்லோருக்கும் வழங்கக்கூடிய சலுகைகள்,சம்பளம் போன்றவற்றை தான் சம்பந்தர் அவர்களுக்கும் வழங்கியுள்ளனர்.

பாராளுமன்றத்திற்கு எல்லோரும் ஒழுங்காக போவதில்லை.பல சந்தர்ப்பங்களில் அவர்கள் வெளிநாடு சென்றால் பாராளுமன்றம் போக முடியாத நிலை ஏற்படும்.சுகயீனம் ஏற்பட்டால் பாராளுமன்றம் செல்ல முடியாது.இதனால் அவர்கள் யாரும் சம்பளத்தை பெற்று கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்.

எல்லோரும் சம்பளத்தை பெற்றுக்கொள்கிறார்கள்.சம்பந்தன் அவர்களை ஒரு ஊழல் பேர்வழி என்று சுமந்திரன் கூற முயன்றால் அது தவறானது.

பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களை பொருத்தவரையில் ஆயிரம் முரண்பாடுகள் அவருடன் எங்களுக்கு இருக்கின்றது. சம்மந்தன் அவர்கள் ஒரு போதும் சும்மா இருக்கவில்லை. அவர் வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கின்றார். வெளிநாட்டில் இருந்து வருகின்ற பல்வேறு ராஜதந்திரிகளை சந்திக்கின்றார்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து அரசுக்கு கடிதம் எழுதுகிறார்.ஜனாதிபதியுடன் இடம் பெறும் கலந்துரையாடல்களில் கலந்து கொள்கிறார்.

அப்படியான ஒருவரை எதுவும் செய்யாதது போல் ஒரு தோரணையை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் காட்ட முனைவதும், அவர் சம்பளத்தை வேண்டி ஊழல் எதுவுமே செய்யாது ஊழல் செய்கிறார் என்ற அடிப்படையில் சுமந்திரன் பேச முனைவது தவறானது.

இலங்கையின் ஊழல்கள் குறித்து பேசும் நிகழ்வு ஒன்றில் இவ்வாறான கருத்தை சுமந்திரன் முன் வைத்துள்ள மையானது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இதனை ஊழல் என்று ஏற்றுக்கொள்ள முடியாது அவர்களுக்கான சம்பளம் மற்றும் சலுகைகள் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுகின்றது.

எனவே பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஒரு ஊழல் பேர் வழியாக காட்ட முனைந்தால் அது பிழை. சம்பந்தன் தனது முதுமை காரணமாக பதவி விலக விரும்பினால் அவர் விலக முடியும். அது அவருடைய முடிவு. உள் வீட்டு விவகாரமாக இருந்தாலும் கூட நாங்கள் வெளியில் இருந்து பார்க்கின்ற போது இவ்வாறான நடவடிக்கைகள் தவறாகவே காணப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். 
 

Leave a Reply