• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காசா முனையை இரண்டாக பிரித்து விட்டோம் - இஸ்ரேல் ராணுவம்

ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்துள்ள இஸ்ரேல், அவர்கள் மறைந்திருக்கும் பாலஸ்தீன காசா முனை பகுதி மீது கடந்த அக்டோபர் 7 முதல் நடத்தி வரும் போர், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சுமார் 9770 பேருக்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார துறை அமைச்சர் தெரிவித்தார்.

பல உலக நாடுகளின் தலைவர்கள் போர் நிறுத்த கோரிக்கையை விடுத்திருந்தனர். ஆனால், இதனை இஸ்ரேல் புறக்கணித்து விட்டது.

"போர் நிறுத்தமா? அந்த வார்த்தையையே அகராதியிலிருந்து எடுத்து விடுங்கள். அக்டோபர் 7 அன்று பணயக்கைதிகளாக பிடித்து சென்றவர்களை ஹமாஸ் விடுவிக்காத வரை போர் நிறுத்தம் எனும் பேச்சிற்கே இடமில்லை. நாங்கள் வெற்றி பெறும் வரை போரை தொடர்ந்து நடத்தியாக வேண்டும்; வேறு வழியில்லை" என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உறுதிபட தெரிவித்திருந்தார்.

இப்பின்னணியில் இஸ்ரேலிய ராணுவ படைகளின் (IDF) செய்தித்தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகரி, தற்போதைய நிலவரம் குறித்து கருத்து தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

முக்கியமான இடங்களில் தாக்குதல்களை தொடர்கிறோம். நாங்கள் காசா முனை பகுதியை முற்றிலுமாக சுற்றி வளைத்து விட்டோம். அதனை இரண்டாக பிரித்து விட்டோம். இப்போது காசா, வடக்கு காசா மற்றும் தெற்கு காசா என இரண்டாகி விட்டது. வட காசா மீது எந்நேரமும் தாக்குதல் நடத்த தயாராக உள்ளோம். கடற்கரையையொட்டி உள்ள பகுதிகளை எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டோம். பயங்கரவாத அமைப்பினருக்கு சொந்தமான பூமிக்கு அடியில் உள்ள சுரங்கங்கள், மேலே உள்ள தளங்கள், தளவாடங்கள் ஆகியவை மீதான தாக்குதல் தொடர்கிறது. அக்டோபர் 7 அன்று எங்களுக்கு நடந்ததை உலகம் மறக்க விட மாட்டோம்.

இவ்வாறு ஹகரி தெரிவித்தார்.
 

Leave a Reply