• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காசாவில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமான வகையில் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. ஐ.நா. பொதுச்சபையில் போர் நிறுத்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போர் இடைநிறுத்தம் தேவை என அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், இரண்டையும் ஏற்க இஸ்ரேல் மறுத்துவிட்டது. போரை நிறுத்தினால் ஹமாஸ் அமைப்பிடம் தாங்கள் தோற்றதாகிவிடும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்திருந்தார்.

இஸ்ரேல் தொடர் தாக்குதலுக்கு இடையே நேற்று முன்தினம் காசாவில் தகவல் தொடர்பை துண்டித்தது இஸ்ரேல். அதனைத் தொடர்ந்து காசாவை வடக்கு, தெற்கு என இரண்டாக பிரித்துள்ளது. இத்தகவலை இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அத்துடன் இஸ்ரேல் தரைப்படைகள் எப்போது வேண்டுமானாலும் முழுமையாக தாக்குதல் நடத்த தயாராக இருக்கிறது.

இதற்கிடையே ஹமாஸ்- இஸ்ரேல் போரில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் 4,100-க்கும் மேற்பட்ட குழந்தைகள், 2,640 பெண்கள் அடங்குவர். இந்த தகவலை காசாவில் அதிகாரம் நடத்தி வரும் ஹமாஸின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆக்கிரமிப்பு செய்துள்ள மேற்கு கரையில் 140-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் வன்முறை மற்றும் சோதனையின்போது கொல்லப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேலில் 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். 242 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.

ராஃபா எல்லை வழியாக சுமார் 1,100 பேர் காசா முனையில் இருந்து வெளியேறியுள்ளனர்

தற்போது காசாவில் மீண்டும் தகவல் தொடர்பு கிடைக்கப் பெற்றுள்ளது. பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பவர்களை உலக நாடுகள் மறந்து விடுவோ என அவர்களது குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply