• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆரோக்கியம்தானாஇது.?

சினிமா

பாகுபலி இந்தியா முழுவதும் ரிலீசாகி ..
500 கோடி வசூல் தாண்டி விட்டது என்று படித்த போது ,
'வாவ்' என்று மூக்கின் மேல் விரலை வைத்து ஆச்சரியப்பட்டே போனோம் .
காரணம் , அதுவரை உலகெங்கும் ஒரே நேரத்தில் பல்வேறு மொழிகளில் வெளியாகும் ஹாலிவுட் படங்களுக்கு மட்டுமே இது சாத்தியம் எனும் சூழல் இருந்தது .
ஹிந்தி படங்கள் கூட .. வெளிநாடுகளில் அதிகமானவர்கள் பேசும் மொழி எனும் தன்மையால் ,
பெரிய ஹீரோக்களின் ஒரு சில படங்கள் இந்த சாதனையை படைத்திருந்தன.
இதை உடைத்து , ஒரு தென்னிந்திய படம் இச்சாதனையை இலகுவாக எட்டிய போது பெருமையாகக் கூட இருந்தது எனலாம் .
அதைத் தொடர்ந்து பல படங்கள் இச்சாதனையை படைக்கத் தொடங்கின.
KGF , பொன்னியின் செல்வன் ,RRR, காந்தாரா, விக்ரம் என தொடர்ந்த போது காலரை தூக்கி விட்டுக் கொள்ளத்தான் தோன்றியது .
ஆனால் , இந்த மூன்று  மாதங்களில் மிகப்பெரிய வசூல் புரட்சி அல்லது திரைத்துறையின் பொற்காலம் என்று கூட சொல்லலாம் .
ஜெயிலர் 800 கோடி ,
ஜவான் 1150 கோடி ,
லியோ ஒரே வாரத்தில் 500+ கோடி என வேறு வகையில் பணத்தைக் குவித்து எவரின்  புருவத்தையும் உயரச் செய்திருக்கின்றன.
லியோ எப்படியும் 1000+ கோடிகளைத் தொடும் என்பது திரைத்துறையினரின் கணிப்பு .
இந்த மூன்று சாதனையாளர்களுமே..
தென்னிந்தியாவைச் சார்ந்தவர்கள் என்பதும் ,
அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் என்பது இன்னும் தனித்துவமானது .
பிரச்னை இங்கு தான் ஆரம்பமாகிறது அனைத்து இயக்குனர்கள் மற்றும் திரைத்துறை தயாரிப்பு சார்ந்தவர்களுக்குமே .
ரஞ்சித் , வெற்றிமாறன் , மாரிசெல்வராஜ் போன்று மக்களின் வாழ்வியல் சார்ந்து திரைப்படம் எடுத்துக் கொண்டிருப்பவர்கள் ,
வசூல் வேட்டை அழுத்தத்தில் இது போன்ற மசாலா படத்தை எடுக்க நிர்பந்திக்கப்படுவார்களே என்கிற எண்ணமும் ;
அவர்களுக்குமே தானும் இது போன்ற‌ ஒரு மாஸ் படத்தை தந்து விட வேண்டுமென்கிற இலக்கும் கூட தோன்றிவிட வாய்ப்புள்ளது .
இவர்களின் நிலைமையே இதுவென்றால்,

மற்ற வளர்ந்து வரும் டைரக்டர்களின் நிலைமை மற்றும் மனநிலையை சொல்லவா வேண்டும் நண்பர்களே .?!
திரைப்படங்கள் என்பவை வெறும் பொழுது போக்கு அம்சம் கொண்டவை மட்டும் அல்லவே .
அவை சமூகத்தின் அவலங்களையும் ,
எங்கோ ஒரு மூலையில் சக மானிடருக்கு நடந்த / நடக்கும் அநீதியையும் எடுத்தியம்பும் அற்புதமான இணைப்புத் தளம் அல்லவா .?!
படிப்பின் முக்கியத்துவத்தையும் ,
ஒழிக்கப்பட‌ வேண்டிய சாதிய பெருமைகளையும் குறித்து வெளிவந்த #தேவர்மகன் ,
படிப்பு ஒன்றை மட்டும் தான் பிறரால் உன்னிடமிருந்து திருடவே இயலாது என்பதை பறை சாற்றிய #அசுரன் ,
பிறப்பினால் கருதப்படும் பாரபட்சம் , அவர்களுக்கு கிடைக்காத கல்வி மற்றும்‌ உரிமைகள் குறித்து விழிப்புணர்வு உண்டாக்கிய #பரியேறும்பெருமாள், #கர்ணன், #மாமன்னன் ,
இன்றைய தொழிட்நுட்ப புரட்சி காலத்தில் , ஏமாற்று பேர்வழிகள் எவ்வாறெல்லாம் வலம்‌வருகிறார்கள் என்று எடுத்தியம்பிய #சதுரங்கவேட்டை, #இரும்புத்திரை ,
வாச்சாத்தி கொடுமைகள் போன்று எங்கோ ஒரு குக்கிராமத்தில் உள்ள மனிதர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் பாலியல் கொடுமைகளையும்‌,
சட்டத்தை கையில் வைத்துக்கொண்டு அரசு அதிகாரிகள் செய்த / செய்கின்ற அத்துமீறல் அட்டூழியங்களை வெளிக்கொணர்ந்த #ஜெய்பீம் , #விடுதலை என
சமூக அக்கறை கொண்ட அற்புதமான திரைப்படங்கள் ஏராளம்.
இன்று விஸ்வரூபம் எடுத்திருக்கும் இந்த வசூல் வேட்டை மனநிலை ..
இயக்குனர்களை அவர்களின் இயல்பான போக்கில் இயங்க விடுமா ?!
வணிக ரீதியான நோக்கில் எடுக்கப்படாத இது போன்ற திரைக்காவியங்களை வெளிக்கொணர விடுமா .?!
முன்பெல்லாம் ஒரு திரைப்படம் 100 நாட்கள் ஓடினால் தான் 'வெற்றி' என்று பார்க்கப்பட்ட மனநிலையில் இருந்து ,
முதலீடு செய்த பணத்தை எடுத்தாலே போதும் என்கிற மனநிலைக்கு திரைத்துறையில் பெரும்பாலானோர் வந்து விட்ட சூழல் ஒரு புறம் .
இனி 500 கோடிக்கு மேல் வசூல் செய்தால் தான் வெற்றிப்படம் என்கிற மனப்பாங்கும் ; அதுவும் முதல் வாரத்தில் இந்த வசூல் வந்தால் தான் உண்மையான வெற்றி என்கிற மனப்பாங்கும்  இண்டஸ்ட்ரீயில் வலம் வரத் தொடங்கி விடுமோ என்கிற பதைபதைப்பும் இல்லாமல் இல்லை.
இதுவும் கடந்து போக வேண்டும் என்கிற விருப்பத்துடன் ..

LICதமிழ்.,
 

Leave a Reply