• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மறைந்த நடிகை சுஜாதா  பற்றி  நடிகர் சிவகுமார்

சினிமா

சரித்திரம் படைத்த  அன்னக்கிளி  படத்தின் கதாநாயகிக்கு உச்சபட்ச புகழ். ஆனால், அதை கொண்டாடும் மனநிலையில் சுஜாதா இல்லாமல் போனது துரதிஷ்டம். படப்பிடிப்பு முடிந்து கடைசி நாள் திருஷ்டி பூசணிக்காய் சுற்றியபோது என் காதுக்குள் -இந்தப் படம் நல்லா போகக்கூடாது சார். போனா திரும்பத் திரும்ப என்னைப் பல படங்களுக்கு ‘புக்’ பண்ணுவாங்க. தொடர்ந்து நான் நடிக்கணும். இதே சித்ரவதையை அனுபவிக்கணும். வேண்டாம் சார்! இந்தப் படம் ஓட வேண்டாம்!’ என்று கண்ணீருடன் சொன்னார்.

அது மட்டுமல்ல, தமிழகமெங்கும் நடந்த தியேட்டர் ‘விசிட்’களில் அவர் கலந்துகொள்ளவே இல்லை.  மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்று கவிஞர்கள் பாடி விட்டுப் போய் விட்டனர். அந்த மங்கையர்க்கு -நாட்டில், வீட்டில், கணவனிடத்தில், பெற்றவர்களிடத்தில் உரிய மரியாதை, அன்பு, அரவணைப்பு எல்லோருக்கும் கிடைக்கிறதா?

40 ஆண்டுகளுக்கு முன் ஒரு நள்ளிரவு படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. அந்தப் படத்தின் கதாநாயகி எரிமலையின் உச்சியில் அமர்ந்திருந்தால் எப்படிப் பொங்குவாளோ, அப்படி பொங்கி, ‘சார்! என்னோட கடந்த காலத்தை கேக்காம கல்யாணம் பண்ணிக்கத் தயார்னு ஒரு குருவிக்காரனோ, கிளி ஜோசியரோ சொன்னா, பேசாம அவனைக் கல்யாணம் பண்ணிட்டு, நடிப்புக்குக் கும்பிடு போட்டுட்டு போயிடுவேன் சார். பணம் காய்க்கும் மரமா என்னை அப்பா அம்மா பயன்படுத்தறாங்க. என் உடம்புக்கு சரியில்லாமப் போனாலும், கால்ஷீட் குடுத்திடறாங்க. எனக்குப் பிடிக்காத கேரக்டரா இருந்தாலும் பணத்துக்காக நடிக்கச் சொல்றாங்க. எனக்குன்னு தனி அக்கவுண்ட் பேங்க்ல கிடையாது. மார்க்கெட் இருக்கிற வரைக்கும் என்னை சாறாப் புழிஞ்சு எடுத்திட்டு, சாகடிக்கப் போறாங்க. என் விருப்பு, வெறுப்பு பத்தி அவங்களுக்கு அக்கறையில்லை. இந்த டார்ச்சர் தாங்காம தற்கொலை செஞ்சுக்கலாம்னு கூட பல தடவை தோணிச்சு!’ என்று சொன்னபோது, எப்படி அவருக்கு ஆறுதல் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. அந்த நாளில் இப்படி ஒவ்வொரு கதாநாயகிக்குள்ளும் ஒரு போராட்டம் இருக்கவே செய்தது. ஆனால் சுஜாதா அதை வெளியே சொல்லாமல் கண்ணீர் வழி அதை வெளிப்படுத்தி வாழ்ந்தார்.

'அன்னக்கிளி' வெளியாகும்போது தன்னையே வெறுத்த சூழலில் இருந்தவரை காலம் விடவில்லை. தமிழ்நாட்டின் மிகச்சிறந்த உணர்வுப் பூர்வமான கதாநாயகியாக புகழ்பெற வைத்தது. பாலசந்தரின் 'அவள் ஒரு தொடர்கதை', 'மூன்று முடிச்சு', 'அவர்கள்' போன்ற படங்களும், பாலாஜியின், ‘விதி’ படத்து நீதிமன்றக் காட்சிகளும், என்னோடு நடித்த 10 படங்களில் 'வாட்ச்மேன் வடிவேலு' போன்ற படங்களும், கமல், ரஜினிகாந்த் உடன் நடித்ததோடு, சிவாஜியுடன் ‘தீபம்’, 'அண்ணன் ஒரு கோயில்', 'அந்தமான் காதலி', 'விஸ்வரூபம்', 'தீர்ப்பு', 'தியாகி', 'திருப்பம்' போன்ற படங்களிலும், கமலுடன், 'உயர்ந்தவர்கள்', 'கடல்மீன்கள்' எனத் தமிழகத்தின் உச்ச நட்சத்திரங்கள் அத்தனை பேருடனும் நடிப்பில் சவால் விட்டவர்.   நடிக்கும்போது கண்ணீர் வர, ‘க்ளிசரின்’ என்ற திரவத்தை எல்லோரும் பயன்படுத்தி அழுவார்கள். சுஜாதா எவ்வளவு எமோஷனல் காட்சியாக இருந்தாலும் தாரை தாரையாக உண்மையாகவே கண்ணீர் விட்டு அழுது நடிப்பார். தியேட்டரில் தனது காட்சிகளுக்குக் குரல் பதிவு (டப்பிங்) செய்யும்போது கூட கண்களிலிருந்து கண்ணீர் அருவியாகக் கொட்டும். அப்படி ஒரு அபூர்வ நடிகை.

‘‘சார்! ஒரு வழியா எனக்குக் கல்யாணமாயிருச்சு. நடிகைகள் ஒரே ஆளோட இருக்க மாட்டாங்க. டைவர்ஸ் பண்ணிட்டு அடுத்த புருஷனைத் தேடுவாங்கன்னு குற்றச்சாட்டு இருக்கு. நான் அப்படி இல்லை. கடைசி வரை ஜெயகர் மனைவியா வாழ்ந்துதான் சாவேன்!’’ என்று சொல்லி அப்படியே ஜெயகர் மனைவியாக மரணித்தபோது, மரியாதை செய்ய அவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன்.

புன்னகை பூத்த அந்த முகத்தின் மீது அவர் சொன்ன வார்த்தைகள் ஒலித்தன.

Sukumar Shan

Leave a Reply