• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது பெரிய தவறு - அதிபர் ஜோ பைடன்

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய 9-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து ஐநூறைக் கடந்துள்ளது.

காசாவில் உள்ள ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் ராணுவம் எந்த நேரத்திலும் மும்முனை தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இதை தடுத்து நிறுத்தவேண்டும் என்பதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தீவிரமாக உள்ளார். இதற்காக அவர் நேற்று இரவு இஸ்ரேல் பிரதமருடன் பேச்சு நடத்தினார்.

இந்நிலையில், அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் இஸ்ரேல் போர் தொடர்பாக பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

இஸ்ரேல் போரில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டும். இந்த போரில் அப்பாவி பொதுமக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. காசாவில் உள்ள அப்பாவி மக்கள் குடிதண்ணீர், மருந்து இல்லாமல் தவிப்பது தெரிய வந்துள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு இஸ்ரேல் அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும். உடனடியாக காசா மக்களுக்கு குடிதண்ணீரை வழங்கும்படி இஸ்ரேலுக்கு நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

ஆயுதம் ஏந்திப் போராடும் ஹமாஸ் படையினரை முழுமையாக ஒடுக்கவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஹமாஸ் படையினர் முற்றிலுமாக வெளியேற்றப்பட வேண்டும். அதற்காக காசாவை ஆக்கிரமித்து அந்தப் பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று இஸ்ரேல் நினைப்பது சரியல்ல.

இஸ்ரேலில் தரைவழி தாக்குதல் மிகப்பெரிய தவறாக முடிந்துவிடும். அந்த தவறை இஸ்ரேல் செய்யாது என்று நம்புகிறேன். காசா பகுதி முழுக்க முழுக்க பாலஸ்தீன அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டும். அதில் அமெரிக்கா தெளிவான கொள்கை முடிவுடன் இருக்கிறது.

காசாவில் உள்ள அப்பாவி மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அவர்கள் விரும்பினால் அருகில் உள்ள நாடுகளுக்கு இடம்பெயர உதவி செய்யவேண்டும். காசா வடக்கு பகுதி மக்கள் எகிப்து நோக்கிச் சென்ற வண்ணம் உள்ளனர்.

அவர்களை எகிப்து நாடு அரவணைத்து உதவவேண்டும். இதற்காக நாங்கள் எகிப்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறோம். காசாவில் உள்ள பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்ந்து உறுதி செய்யப்பட வேண்டும்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே ஏற்பட்டுள்ள போரை தொடர்ந்து அமெரிக்கா அந்தப் பகுதிக்கு மேலும் ஒரு கப்பலை அனுப்பி இருக்கிறது. இந்தப் போரில் இதுவரை 30 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

என்றாலும் இந்தப் போரில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட விரும்பவில்லை. அதற்கான காரணமும் இல்லை. இஸ்ரேலுக்கு கூடுதல் உதவிகள் செய்ய அமெரிக்காவில் கோரிக்கை எழுந்துள்ளது. அதுபற்றி பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply