• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பற்றியெரியும் பாலஸ்தீனம்

இஸ்ரேலின் தெற்குப் பிராந்தியம் மீது காஸா பிராந்தியத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள பாலஸ்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸ் ஒக்டோபர் 7ஆம் திகதி நடத்திய அதிரடித் தாக்குதல் மிகப்பெரும் மோதலாக உருவெடுத்துள்ளது. மிகவும் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த பொதுமக்கள் தாக்குதலுக்கு இலக்கானதில் பல நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயங்களுக்கு இலக்காகினர். வெளிநாட்டவர்கள் உட்பட நூற்றுக் கணக்கானோர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுக் காஸா பிராந்தியத்துக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீனத் தீவிரவாதிகளுக்கு எதிராக எப்போதுமே அதீத பலத்தைப் பிரயோகிக்கும் இஸ்ரேல் இம்முறை மிகக் கொடூரமாக விமான மற்றும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தி காஸா பிராந்தியத்தைத் தரைமட்டமாக ஆக்கியுள்ளது. நூற்றுக் கணக்கான பொதுமக்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆயிரக் கணக்கானோர் காயங்களுக்கு இலக்காகி உள்ளனர். காஸா பிராந்தியம் மீது போர்ப் பிரகடனம் மேற்கொண்டுள்ள இஸ்ரேலிய அரசாங்கம் ஏற்கனவே முற்றுகைக்கு உள்ளாகியுள்ள அந்தப் பிராந்தியத்துக்கான மின்சாரம், குடி தண்ணீர் மற்றும் உணவு விநியோகங்களைத் தடை செய்துள்ளது.

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் உலகின் பல நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருவதைப் பார்க்க முடிகின்றது. அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் உடனடியாகவே இஸ்ரேலுக்கான தமது ஆதரவை வெளியிட்டுள்ளது. அது மாத்திரமன்றி தனது மிகப் பெரிய விமானம் தாங்கிக் கப்பலை மத்திய கிழக்குப் பிராந்தியத்துக்கு அனுப்பி வைத்துள்ள அமெரிக்கா இஸ்ரேலியப் படையினருக்குத் தேவையான ஆயுத தளபாடங்களை வழங்கப் போவதாகவும் கூறியுள்ளது.

மறுபுறம், ஹமாஸ் அமைப்புக்கு தனது வெளிப்படையான ஆதரவை ஈரான் உள்ளிட்ட அரபு நாடுகள் தெரிவித்துள்ளன.

அதேவேளை, அரபு லீக், ஆபிரிக்க ஒன்றியம் உள்ளிட்ட அமைப்புகள் போரைக் கைவிட்டு பேச்சுக்கள் மூலம் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ளுமாறு இரண்டு தரப்பினரையும் கோரியுள்ளன. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளான சீனா, ரஸ்யா என்பவையும் போரை நிறுத்தி பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு கோரியுள்ளன.

போர் என்பது எப்போதும் அழிவுகளுக்கே வழிவகுக்கும் என்பது அனைவரும் அறிந்த செய்தியே. ஆனாலும் போர்கள் தொடரவே செய்கின்றன. அதுவே இன்றும் உலக ஒழுங்காக இருந்து வருகின்றது. இப்போரிலும் இரண்டு தரப்பிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இப்போர் உடனடியாக முடிவுக்கு வராவிடில் கொல்லப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும்.

இப்போர் தொடர்பில் மேல்நாட்டு ஊடகங்கள் நடந்து கொள்ளும் விதம் தற்போது அதிக விமர்சனங்களைச் சந்தித்துள்ளதைப் பார்க்க முடிகின்றது. பொதுவாக கொல்லப்பட்ட மனிதர்கள் பற்றிப் பேசும் போது அவை இஸ்ரேலியக் குடிமக்களுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை பாலஸ்தீன மக்களுக்கு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இஸ்ரேலியர்களை மனிதர்களாகக் கணிக்கும் மேலைத்தேய ஊடகங்கள் பாலஸ்தீனியர்களைத் தரக்குறைவானவர்களாகக் கணிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
 
பாலஸ்தீன இஸ்ரேலிய மோதலில் மேற்குலக ஊடகங்கள் இவ்வாறு நடந்து கொள்வது இதுவே முதல் முறையல்ல. மேற்குலக ஊடகங்கள் எப்போதும் இஸ்ரேலுக்குச் சாதகமாகவே செய்திகளை வெளியிட்டு வருகின்றமை ஒன்றும் இரகசியமல்ல. மேற்குலக ஊடகங்கள் பெரும்பாலும் யூதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாலும், கிறிஸ்தவர்கள் இஸ்ரேலை இயேசு கிறிஸ்துவின் தாயகமாகக் கருதுவதாலும், இஸ்லாமிய வெறுப்புக் கண்ணேட்டத்துடன் பாலஸ்தீனர்களை அணுகுவதாலுமே மேற்குலக ஊடகங்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக மேற்குலகின் நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றும் அவை மேற்குலகின் ஊதுகுழல்களாகவே செயற்பட்டு வருகின்றன.

ஆனால், சமூக ஊடகங்கள் பரவலாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் எந்தவொரு செய்தியும் விமர்சனங்களில் இருந்து தப்பிவிட முடியாத நிலை உள்ளது. பொதுத் தளங்களில் தமது கருத்துகளைப் பிரதிபலிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுபவர்கள் சமூக ஊடகங்களில் தமது கருத்துகளைப் பதிவு செய்து அவற்றைப் பரவலாக எடுத்துச் செல்லும் நிலை உருவாகி உள்ளது. இதனால் ஒற்றைக் கருத்து என்ற நிலைப்பாடு கேள்விக்கு ஆளாகி உள்ளது. இணைய வெளி அதற்கான கட்டுக்கடங்காத வாய்ப்பை வழங்கி நிற்கிறது.

தமிழ் ஊடகங்கள் கூட மேற்குலக ஊடகங்களின் அடியொற்றியே செய்திகளை வெளியிடுவதை அவதானிக்க முடிகின்றது. பாலஸ்தீன மோதலில் ஒடுக்குபவன் யார், ஒடுக்கப்படுபவன் யார் என்கின்ற பேதத்தைக் கூட உணர முடியாதவையாக அல்லது உணர மறுப்பவையாக ஒருசில ஊடகங்கள் நடந்து கொள்வதைப் பார்க்க முடிகின்றது. எடுத்த எடுப்பிலேயே ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்களைப் பயங்கரவாதிகள் எனக் குற்றச்சாட்டும் இத்தகைய ஊடகங்கள் இஸ்ரேல் நிகழ்த்தும், தொடர்ச்சியாக பல வருடங்களாக நிகழ்த்திக் கொண்டிருக்கும் அரச பயங்கரவாதம் பற்றிப் பேசுவதில்லை.

பொதுமக்களை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்துவதையும், அப்பாவிப் பொதுமக்களைக் கொலை செய்வதையும், போரில் நேரடியாகச் சமப்பந்தப்படாதோரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைப்பதையும் எந்தக் காரணங்களுக்காகவும் ஏற்றுக் கொள்ள முடியாது. அத்தகைய சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் அவை கண்டனத்துக்கு உரியவையே. அதில் சார்புநிலை இருக்க முடியாது.

தற்போதைய நிலையில் இப்போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. மென்மேலும் போர் உக்கிரம் பெறுவதற்கான முகாந்திரங்களே தென்படுகின்றன. இப்போர் நீடிக்குமானால் இரண்டு தரப்பிலும் மனித உயிர்களின் இழப்பே அதிகரிக்கும் என்பதே உண்மை. அது மாத்திரமன்றி இப்போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக மேலும் பல குழுக்களும் இணைந்து கொள்வதற்கான சாத்தியங்களும் உள்ளன. ஏற்கனவே, லெபனானில் உள்ள பாலஸ்தீன விடுதலை இயக்கங்களும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

திட்டமிட்ட தாக்குதல்களைத் தொடங்கிய போதே தாக்குதல்களின் விளைவு என்னவாக இருக்கும் என்பதனை ஹமாஸ் அமைப்பு நிச்சயம் ஊகித்தே இருக்கும். அத்தகைய விளைவை எதிர்கொள்ளும் வகையிலான முன்தயாரிப்புகளை மேற்கொண்டிருக்கும். ஆனாலும், இஸ்ரேலின் தயவில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் காசாப் பிராந்திய மக்களைக் காப்பது என்பது ஹமாஸ் அமைப்பால் முடியக் கூடிய ஒரு விடயம் அல்ல. வல்லரசுகள் நினைத்தால் மாத்திரமே அது சாத்தியம். இஸ்ரேல் இப்போரில் தனது இலக்கை அடையும் வரை வல்லரசுகள் இஸ்ரேல் தரப்புக்கு உடனடியாக அழுத்தம் தரமாட்டா என்பதும் ஊகிக்கக் கூடிய விடயமே.

அதிகம் இழப்புகளைச் சந்திக்கும் தரப்பாக பாலஸ்தீனம் இருந்தாலும் இப்போரில் ஹமாஸ் போராளிகளின் கைகளே ஓங்கி இருப்பதை யாரும் மறுக்க முடியாது. முறியடிக்க முடியாத படைகள், அசைக்க முடியாத புலனாய்வுப் பிரிவைக் கொண்ட நாடு என்ற இஸ்ரேலின் பிம்பம் ஒக்டோபர் 7ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலோடு நிர்மூலமாகிவிட்டது. அதன் விளைவு ஹமாஸ் உறுப்பினர்களின் மனோதிடம் அதிகரிக்கவும், இஸ்ரேலியப் படைகளின் மனோதிடம் குறையவும் காரணமாகியுள்ளது. இழந்த மனோதிடத்தை தனது படைகளிடம் கட்டியெழுப்ப இஸ்ரேலிய அரசுத் தலைமைக்கு நீண்ட காலம் தேவைப்படும் என்பதே உண்மையான கள யதார்த்தம்.

சுவிசிலிருந்து சண் தவராஜா

Leave a Reply