• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுற்றுலா வந்த 2 இஸ்ரேலியர்களை சுட்டு கொன்ற எகிப்திய காவல் அதிகாரி

மத்தியதரைக்கடல் பகுதியில் உள்ள அரபு நாடான எகிப்தின் முக்கிய சுற்றுலா நகரம் அலெக்சாண்ட்ரியா (Alexandria). 

கடற்கரை நகரமான அலெக்சாண்ட்ரியாவில் உள்ள பிரபலமான "போம்பே தூண்" (Pompey's Pillar) எனும் சுற்றுலா தலத்திற்கு வந்திருந்த ஒரு குழுவினரின் மீது அந்நாட்டு காவல்துறை அதிகாரி ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இதில் 2 இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்களும் ஒரு எகிப்து நாட்டை சேர்ந்தவரும் உயிரிழந்தனர்; மற்றொரு இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர் காயமடைந்தார். அவரை இஸ்ரேலுக்கு அனுப்பும் முயற்சியில் எகிப்தும் இஸ்ரேலும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.

துப்பாக்கி சூடு நடத்திய அந்த அதிகாரி காவலில் எடுக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தப்பட்ட அந்த சுற்றுலா பகுதியை காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

சமூக வலைதளங்களில் இது குறித்து வெளியாகியுள்ள ஒரு வீடியோவில் சுடப்பட்ட இருவர் தரையில் கிடப்பதையும், அதில் ஒருவருக்கு தலையிலிருந்து ரத்தம் வெளியாவதும் காண முடிகிறது. சுற்றுலா குழுவை சேர்ந்த இஸ்ரேலி பெண்கள் "ஆம்புலன்ஸ், ஆம்புலன்ஸ்" என உரத்த குரலில் உதவி கேட்பதையும் காண முடிகிறது.

நேற்று முன் தினம் இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் தாக்குதல் நடத்தியதனால், பதிலடியாக இஸ்ரேல் பாலஸ்தீன காசா பகுதிக்குள் பெரும் தாக்குதல் வேட்டையை நடத்தி வருகிறது. இப்பின்னணியில், எகிப்தில் இஸ்ரேலியர் சுட்டு கொல்லப்பட்டுள்ளது உலகெங்கும் உள்ள இஸ்ரேலியர்களிடையே பதட்டத்தை அதிகரித்துள்ளது.

Leave a Reply