• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்ய அனுமதி

இலங்கை

உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு பொது நிர்வாக அமைச்சின் ஆலோசனைக் குழு ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேர்தல் பிற்போடப்பட்டமையினால் வேட்புமனுக்களை சமர்ப்பித்தவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி உள்ளதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அதன் ஆலோசனைக் குழு கூட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை சமர்ப்பித்த கள உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் தடைகள் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அவ்வாறான தடைகளை நீக்குவதற்கு உரிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

சட்டமா அதிபருக்குக் கிடைத்த அறிவுறுத்தல்களின்படி, ஒரு சட்டத்தை பழைய நிலைக்கு மாற்றுவதற்கு ஒரு திருத்தம் தேவைப்பட்டால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்லது பொது வாக்கெடுப்பு தேவை என்று இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பிரதேச செயலாளர்கள் உட்பட அனைத்து நிர்வாக உத்தியோகத்தர்களின் இடமாற்றங்களும் உரிய முறையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென இதன்போது பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார்.

Leave a Reply