• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பெரு நாட்டில் 544 மாவட்டங்களில் அவசரநிலை பிரகடனம் - எல் நினோ எதிரொலி

அமேசான் மழைக்காடுகள் நிரம்பிய வட அமெரிக்க நாடு, பெரு. இதன் தலைநகர் லிமா.

மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் கடலின் மேற்புரத்தில் ஏற்படும் அதிகப்படியான வெப்பமயமாதலால் அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளில் பருவகால மாற்றங்களில் - சில வருட கால இடைவெளிகளில் - ஒரு சமச்சீரற்ற நிலை உருவாகிறது. இதன் காரணமாக அதிக வறட்சி, அதிக மழைபொழிவு என வானியல் சூழ்நிலை மாறி மாறி திகழ்கிறது. இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடும், வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களும் அதிகம் உருவாகின்றன. இந்நிகழ்வை "எல் நினோ" (El Nino) என சுற்றுச்சூழல் வல்லுனர்கள் அழைக்கின்றனர். பல வருடங்களாகவே இந்த சிக்கலை சமாளிக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என வானிலை நிபுணர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் பெரு நாட்டில், செப்டம்பர் 13 அன்று அந்நாட்டின் தேசிய சிவில் பாதுகாப்பு நிறுவனம், நீர் நிலை குறித்த தனது தொழில்நுட்ப அறிக்கையில் எல் நினோ தாக்குதல் 2024 கோடை காலம் வரை இருக்கும் என எச்சரித்தது. இதனையடுத்து பெரு நாட்டில் நேற்று தொடங்கி 2 மாத காலத்திற்கு 544 மாவட்டங்களுக்கு அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வரவிருக்கும் எல் நினோ நிகழ்வினால் அங்கு பெரும் வறட்சியும் அதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படவிருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்திருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. நிலைமையை சமாளிக்க அந்நாட்டின் மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அரசாங்க அமைப்புகளும் தேசிய சிவில் பாதுகாப்பு நிறுவனமும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பின் பொது சபையின் சந்திப்பில் பேசிய பெரு நாட்டு அதிபர் டினா பொலுவார்டே (Dina Boluarte) எல் நினோ நிகழ்வை எதிர்கொள்ள பன்னாட்டு கூட்டு முயற்சியும் ஒப்பந்தமும் அவசியம் என வலியுறுத்தினார்.

Leave a Reply