• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்காவில் விபத்தில் உயிரிழந்த இந்திய மாணவிக்கு பட்டம் வழங்க முடிவு - வாஷிங்டன் பல்கலைக்கழகம் அறிவிப்பு

ஆந்திராவை சேர்ந்த ஜானவி கண்டுலா (வயது 23) என்ற மாணவி அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வடகிழக்கு பல்கலைக்கழகத்தில் தகவல் அமைப்புகள் பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்த ஆண்டுடன் படிப்பு முடிந்து, வருகிற டிசம்பர் மாதம் பட்டம் பெற இருந்தார். ஆனால் கடந்த ஜனவரி 23-ந்தேதி இரவு சியாட்டில் நகரில் சாலையை கடந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த போலீஸ் கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இது அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தின்போது காரில் இருந்த டேனியல் ஆடரர் என்ற போலீஸ் அதிகாரி, விபத்து தொடர்பாக உயர் அதிகாரியிடம் தெரிவித்தபோது நடந்த உரையாடல் அவரது உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி இருந்தது.

அதில் அவர், இளம்பெண்ணை வழக்கமான ஒரு நபர்தான் என்றும், அவரது உயிருக்கு குறைந்த மதிப்புதான் எனவும் கூறுகிறார். மேலும் வெறும் 11 ஆயிரம் டாலருக்கான ஒரு காசோலையை உடனே எழுதுங்கள் என்றும் கூறும் அவர், இளம்பெண்ணுக்கு ஒரு 26 வயது இருக்கும் என்றும் அலட்சியமாகவும், கிண்டலாகவும் கூறுகிறார். இந்த வீடியோ பதிவு சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவிடம் மத்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளதுடன், அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியது. அதன்படி, இது குறித்து விசாரணை நடத்தப்படும் என அமெரிக்கா உறுதியளித்து உள்ளது.

இந்த நிலையில் விபத்தில் பலியான மாணவி ஜானவிக்கு வருகிற டிசம்பர் மாதம் பட்டம் வழங்கப்படும் (இறப்புக்குப்பின்) என பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் கென்னத் ஹெண்டர்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஜானவியின் இழப்பை மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆழமாக உணருவார்கள். ஜானவிக்கு மரணத்திற்குப் பின் பட்டம் வழங்கி அதை அவரது குடும்பத்தினரிடம் வழங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது' என குறிப்பிட்டு இருந்தார். மேலும் மாணவியின் இறப்பு தொடர்பாக நடந்து வரும் விசாரணையில் நீதி கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். இதற்கிடையே மாணவியின் இறப்பை கிண்டல் செய்த போலீஸ் அதிகாரியை பணிநீக்கம் செய்யுமாறு புகார்கள் குவிந்து வருகின்றன. ஆனால் இந்த குற்றச்சாட்டை போலீஸ் அதிகாரிகள் சங்கம் மறுத்து உள்ளது. அந்த வீடியோவில் உரையாடலின் ஒரு பகுதி மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும், மேலும் பல விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றும் அந்த சங்கம் கூறியுள்ளது.

Leave a Reply