• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோருவாரா சஜித்

இலங்கை

ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணையை கோரும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்காக சர்வதேச விசாரணையை கோருவாரா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வியெழுப்பினார்.
  
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையை கோரி கத்தோலிக்க மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள அவர் முயற்சிக்காது, 2009இல் தமிழினம் அழிக்கப்பட்டமை தொடர்பான செனல் 4 வீடியோ தொடர்பிலும் எதிர்க்கட்சி நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான முதலாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சர்வதேச விசாரணையொன்றை எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார். இதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் 2009 ஆம் ஆண்டு மிருகத்தனத்திற்கும் மேலாக எம் இன மக்கள் கொன்றழிக்கப்பட்டனர். அதனையும் செனல் 4 வெளியிட்டிருந்தது. இசைப்பிரியா புலிகளின் குரல் வானொலியில் பணியாற்றினார் என்பதற்காக அவரை மானபங்கப்படுத்தி மிகவும் கொடூரமாக கொலை செய்த வீடியோ வெளியாகியிருந்தது.

அந்த விடயத்தை பல முறை இந்த சபையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர். இந்நிலையில் ஈஸ்டர் தாக்குதல் ஆட்சி மாற்றத்திற்காக நடந்தது என்று சர்வதேச விசாரணையை கோருகின்றார்.

இந்நிலையில் 2009 ஆம் ஆண்டில் சர்வதேச தரவுகளின் படி நாற்பதாயிரம் பேர் என்று கூறினாலும், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், யுவதிகள் உள்ளிட்டோர் கொன்றொழிக்கப்பட்டனர். இதுபற்றி எதிர்க்கட்சி தலைவரின் கருத்து என்ன என்று கூற வேண்டும்.

அதேபோன்று 2019 ஆம் ஆண்டில் வடக்கு ஆட்சி மாற்றத்தின் பின்னர் கோட்டாபய ராஜபக்‌ஷ வடக்கு, கிழக்கில் பௌத்த மயமாக்கலை, அங்கு தமிழ் இனப்பரம்பலை இல்லாது செய்ய சட்ட ரீதியாக பல முனைப்புகளை முயற்சித்தார். தொல்பொருள் திணைக்களத்தில் கிழக்கு மாகாணத்திற்கென செயலணியை உருவாக்கினார். முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலையில் இனரீதியில் மக்கள் முரண்படும் வகையில் அந்த பிரதேசத்தில் ஆதிசிவன் அடையாளங்களை அழித்து பௌத்த விகாரையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று திருகோணமலையில் விகாரைகள் அமைப்பது தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. 2019 ஈஸ்டர் தாக்குதல் ஊடாக ஆட்சியை கைப்பற்ற சிங்கள மக்களை எப்படி ஏமாற்றினார்களோ அதேபோன்றுதான் 1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க தமிழ், சிங்கள சட்டத்தை கொண்டு வந்ததில் இருந்து தமிழர்களுக்கு எதிராக பொய்யான கதைகளை கூறி, தமிழர்கள் மீது பலநாடுகளில் இருந்து பணத்தை பெற்று போர் தொடுத்தனர்.

இதனால் நாடு பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளாகியுள்ளது. 1956 ஆம் ஆண்டில் தனிச் சிங்கள சட்டமூலத்தை கொண்டு வந்து பின்னர் பல்கலைக்கழகங்களில் தமிழர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. இதனாலேயே ஆயுதம் ஏந்தி போராடினர். இந்நிலையிலேயே ஆட்சியாளர்கள் தமிழர்களை இலங்கையில் இருந்து அகற்ற வேண்டும் என்று செயற்படுகின்றனர்.

குரூந்தூர் மலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி, அமைச்சர் உள்ளிட்ட பல தரப்பினருடன் கலந்துரையாடிய போதும், இன்னும் தீர்வுகள் கிடைக்கவில்லை. சான்றுகள் அடிப்படையில் சர்வதேச ஆய்வு அவசியமாகும். அதேபோன்று எதிர்க்கட்சித் தலைவர் குரூந்தூர் மலையில் நடந்த விடயம் தொடர்பில் என்ன கருத்தை கூறுகின்றார் என்று கேட்கின்றேன்” என்றார்.

Leave a Reply