• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மருந்துக் கொள்வனவு மோசடிக்கு ஜனாதிபதியே பொறுப்பு - எதிர்க்கட்சித் தலைவர்

இலங்கை

நாட்டில் தற்போது ஆபத்தில் உள்ள மக்கள் தொடர்பாக அரசாங்கமும், சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களமும் முறையான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா. அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமும் Oxford பல்கலைக்கழகமும் இணைந்து நாடு தொடர்பாக மேற்கொண்ட Understanding Multidimensional Vulnerability Impact on People of Sri Lanka என்ற தலைப்பிலான ஆய்வறிக்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம், ஆய்வை மேற்கொண்டவர்களால் கையளிக்கப்பட்டது.

இதன்போது கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர், வறுமைக்கு தீர்வாக அஸ்வெசும திட்டம் அமுல்படுத்தப்பட்டாலும், அது தெளிவானதொரு தீர்வாக காணப்படாததால் நாட்டில் பிளவு ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்களிடம் சுட்டிக்காட்டினார்.

வங்குரோத்து நாட்டில் அரசாங்கம் திருட்டு, ஊழல் மோசடிகளைச் செய்து வருவதாகவும், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் கூட நாட்டுக்கு தரம் குறைந்த மருந்துகள் கொண்டு வரப்பட்டதை ஒப்புக்கொண்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தி தரக்குறைவான மருந்துகளை நாட்டுக்கு கொண்டு வந்தவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட போதே ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் வாய் திறந்தார் என்றும், இதுவரை ஏன் அமைதியாக இருந்தார் என்று கேள்வி எழுப்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியும் அவர் தலைமையிலான அரசாங்கமும் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு திட்டமாக, பல் பரிமாண இடர் குறிகாட்டிகளை அடையாளம் காணும் திட்டம் நம் நாட்டிற்கு இன்றியமையாத திட்டமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் ஆபத்தில் உள்ளவர்கள், கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், காலநிலை மாற்றம் காரணமாக கல்வி கற்க முடியாதவர்கள், வறுமையால் ஆபத்தில் உள்ளவர்கள் போன்றோர் குறித்து ஐ.நா. அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமும் Oxford பல்கலைக்கழகமும் இணைந்து முறையான கணக்கெடுப்பை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரச கொள்கைகளை வகுக்க இதனைப் பயன்படுத்த முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply