• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிப்பு ராட்சஷி காந்திமதி

சினிமா

’குருவம்மா’, ‘ஒச்சாயி கிழவி’, ‘கஞ்சப்புருஷனின் மனைவி’; நிகரில்லா நடிகை; ’நடிப்பு ராட்சஷி’ காந்திமதி! 

’அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது’ என்று ஒரு சில நடிகர் நடிகைகளைச் சொல்லுவார்கள். அந்தப் பட்டியல் மிகச்சிறியதுதான். சின்னஞ்சிறிய பட்டியலுக்குள், விஸ்வரூபமெடுத்து நிற்கும் முக்கியமான நடிகை... காந்திமதி.

சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீதும் கூத்தின் மீது அப்படியொரு ஈடுபாடு காந்திமதிக்கு.

ஜோசப் தளியத் இயக்கத்தில் வந்த ‘இரவும் பகலும்’ தான் ஜெய்சங்கரின் முதல் படம். ஜெய்சங்கருக்கு மட்டுமல்ல... காந்திமதிக்கும் இதுவே முதல்படம். பிறகு, காந்திமதியே மறந்துவிட்ட அளவுக்கு எத்தனையோ படங்கள். ஒரு காட்சி, கூட்டத்தில் ஒருவர், ஒரேயொரு வசனம்... என்றெல்லாம் நடித்து வந்தார். ஜெயகாந்தனின் ‘யாருக்காக அழுதான்’ படத்தில்தான் இவரின் முகம் பரிச்சயமானது ரசிகர்களுக்கு.

எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்டோரின் கருப்பு வெள்ளை, கலர் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். எம்ஜிஆருக்கு அம்மா, சிவாஜிக்கு அம்மா என்றெல்லாம் நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய கதவு திறந்த படம், மிகப்பெரிய பாதையையே உருவாக்கித் தந்த படம் என்றெல்லாம் போற்றப்பட்டு, மொத்த திரையுலகையும் தமிழ் உலகையும் வியக்க வைத்தது பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’. படத்தில் சப்பாணி, மயிலு, பரட்டையன், டாக்டர் எல்லோரும் நம் நினைவில் நிற்கிறார்கள். அதேபோல் இன்றைக்கும் நம் மனதில் நிற்கிற குருவம்மா கேரக்டரை அவ்வளவு சுலபமாக எவரும் மறந்துவிடமுடியாது.

மயிலின் அம்மா குருவம்மா... அச்சு அசலான கிராமத்து அம்மா. வந்த வம்படியை விடாமல், நீயா நானா என்று பார்த்துவிடுகிற ஆவேச அம்மா. மானம் போய்விட்டதை அறிந்து துடித்துக் கதறி, உயிர்விடுகிற யதார்த்த எளிமையான மாந்தராக, அம்மாவாக, குருவம்மாவாக அப்படியொரு அவதாரம் எடுத்தார் காந்திமதி.

கவுண்டமணிக்கு ஜோடியாக, பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருந்தார். இந்த இரண்டு படங்களும் காந்திமதி எனும் நடிகை, சாதாரணரில்லை என்பதை தெளிவுற பறைசாற்றின. கே.பாக்யராஜ் முதன் முதலாக இயக்கிய ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில் கல்லாபெட்டி சிங்காரத்தின் மனைவியாக, பாக்யராஜின் அம்மாவாக இவர் கொடுத்த அலப்பறை செம காமெடி.

மணிவண்ணனின் ‘சின்னதம்பி பெரியதம்பி’யில், பிரபு, சத்யராஜ் அம்மாவாக அட்டகாசமான நடிப்பை வழங்கியிருப்பார். ‘அக்கா...’ என்று ‘கரகாட்டக்காரன்’ படத்தில் சண்முகசுந்தரம் பேசுகிற வசனம் பிரபலம். 

அக்காவாக நடிப்பார். உருகுவார். அம்மாவாக நடிப்பார். பாசம் பொழிவார். மாமியாராக நடிப்பார். மிரட்டியெடுப்பார். ‘கால்கேர்ள்’ வைத்து வியாபாரம் செய்வார். கொஞ்சிக்குழைவார். எந்தக் கதாபாத்திரம் என்றில்லாமல் அசத்துவார். 

திரையுலகில் எல்லோருக்கும்... கமல் உட்பட சகலருக்கும் காந்திமதி அக்காதான். ‘அக்கா அக்கா’ என்று அன்புடன் பழகுவார்கள். கமல், தன் படங்களில் ஏதேனும் ஒரு கேரக்டர் கொடுத்துவிடுவார். 

எல்லாவற்றுக்கும் மேலாக, காந்திமதியை ‘குருவம்மா’வாக்கிய பாரதிராஜா, ‘மண்வாசனை’ படத்தில், ‘ஒச்சாயி’ கிழவியாக ஆக்கியிருந்தார். கையில் கோல், காதில் தண்டட்டி, சுருக்கம் விழுந்த பார்வை, கூன் விழுந்த முதுகு... வார்த்தைக்கு வார்த்தை பழமொழிகள்... என ’மண்வாசனை’யில் ஒச்சாயிக் கிழவி எடுத்ததெல்லாம் விஸ்வரூபம்.

'விருமாண்டி’யில் விருமாண்டியையும் அன்னலட்சுமியையும் தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றுவார் காந்திமதி. இரண்டு மூன்று காட்சிகள்தான். ஆனாலும் மனதில் நின்றுவிடுவார் காந்திமதி. 

இப்படி எத்தனையோ படங்கள். எந்த சாய்ஸும் இல்லாத, எவர் சாயலுமில்லாத நடிகை காந்திமதி.

இன்னும் கொஞ்சம் வாய்ப்புகள், தமிழ்த்திரையுலகம் கொடுத்திருந்தால், ‘நடிப்பு ராட்சஷி’ என்று தமிழ்த் திரையுலகமே இன்னும் கொண்டாடிக்கொண்டிருக்கும்.

காந்திமதி எனும் கலைநயமிக்க நடிகையைப் போற்றுவோம்.

Gomathi Prakash

Leave a Reply