• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நல்லூர் ஆலய சுற்று வீதிகளுக்கு இன்று முதல் பாதுகாப்பு

இலங்கை

நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் இன்று முதல் காலை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி,வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த போக்குவரத்து தடை எதிர்வரும் செப்டம்பர் 16ஆம் திகதி வரை நீடிக்குமென யாழ் மாநகர சபை அறிவித்துள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு செப்டம்பர் 16ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும் என யாழ் மாநகர சபை அறிவித்துள்ளது.

நல்லூர் ஆலய சுற்று வீதிகள் மூடப்பட்டிருக்கும் வேளையில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியினூடாக யாழ் நகரை அடைய முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியினூடாக மாத்திரமே பயணிக்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் வசிப்பவர்களுக்கு மாத்திரம் வாகனங்களை உட்கொண்டு செல்ல யாழ் மாநகர சபையினால் நிபந்தனையுடனான விசேட அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் நல்லூர் ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர வேறு; வாகனங்கள் உட் செல்ல அனுமதியில்லை எனவும் யாழ் மாநகர சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply