• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிறையில் உள்ள இம்ரான்கானை உணவில் விஷம் கலந்து கொல்ல சதி- மனைவி குற்றச்சாட்டு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு, ஊழல் வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனது சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். இந்த நிலையில் சிறையில் இம்ரான்கான் உணவில் விஷம் கலந்து கொல்லப்படலாம் என்று அவரது மனைவி புஷ்ரா பீபி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பஞ்சாப் மாகாண உள்துறை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது:- எனது கணவரின் பாதுகாப்பு குறித்து கவலை அடைந்துள்ளேன். அட்டாக் சிறையில் அவருக்கு விஷம் கொடுக்கப்படலாம். எனது கணவரை எந்த நியாயமும் இன்றி அட்டாக் சிறையில் அடைத்துள்ளனர். அவரை ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு மாற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சட்டப்படி அவரை அடியாலா சிறைக்கு மாற்ற வேண்டும். அவரது சமூக மற்றும் அரசியல் அந்தஸ்துக்கு ஏற்ப சிறையில் பி-கிளாஸ் வசதிகளை வழங்க வேண்டும்.

கடந்த காலங்களில் இம்ரான்கான் மீது இரண்டு கொலை முயற்சிகள் நடந்தன. ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அவரது உயிருக்கு இன்னும் ஆபத்து உள்ளது. அட்டாக் சிறையில் என் கணவர் விஷம் கொடுத்து கொல்லப்படலாம் என்ற அச்சம் உள்ளது. எனவே வீட்டில் சமைத்த உணவை சிறையில் அவர் சாப்பிட அனுமதிக்க வேண்டும். அவருக்கு 48 மணி நேரத்துக்குள் அனைத்து வசதிகளும் வழங்கப்பட வேண்டும். ஆனால் 12 நாட்கள் ஆகியும் இன்னும் வசதிகள் வழங்கப்படவில்லை. சிறை விதிகளின்படி அவருக்கு தனியார் டாக்டரிடம் பரிசோதனை செய்ய உரிமை உண்டு. அவருக்கு வசதிகள் செய்து கொடுக்காதது பற்றி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Leave a Reply