• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விவசாயத்துறையை மதிப்பாய்வு செய்வதற்கு விசேட குழு

இலங்கை

கடந்த ஒன்றரை மாத காலமாக நாட்டில் நிலவும் வறட்சியால் விவசாய துறைக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக மதிப்பாய்வை மேற்கொள்ள 25 பேரை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாயம் மற்றும் விவசாய சேவைகள் காப்புறுதி சபை குறிப்பிட்டுள்ளது.

கடும் வறட்சியான காலநிலையால் இதுவரையில் 15 மாவட்டங்களில் 60 ஆயிரத்து 943 குடும்பங்களை சேர்ந்த சுமார் 2 இலட்சத்து 10 ஆயிரம் பேர் குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பவுசர் மூலம் குடிநீர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்காக இதுவரையில் 4.5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நாட்டில் நிலவும் கடுமையாக வறட்சியான காலநிலையால் 37,101 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ளதுடன் 32,967 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுபோக பயிர்செய்கையில் நெற்பயிர்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளில் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வறட்சியான காலநிலை, நீர் விடுவிப்பு தாமதம் ஆகிய பௌதீக மற்றும் மானிட காரணிகளால் குருநாகல் மாவட்டத்தில் 19,388 ஏக்கர் நெற்பயிர்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், உடவளவ வலயத்தில் 4,050 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் கடந்த ஒன்றரை மாத காலத்திற்குள் காலநிலை மாற்றத்தால் விவசாய நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் மதிப்பாய்வை மேற்கொள்ள 25 பேரை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாயம் மற்றும் விவசாய சேவைகள் காப்புறுதி சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை தென்மாகாணத்தில் பெலியத்தை, தங்காலை, வீரகெட்டிய, அங்குனுகொலபெலஸ்ஸ ஆகிய பிரதேசங்களில் உள்ள அணைகள் மற்றும் நீர் தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக குறைவடைந்துள்ளமையால் குடிநீர் விநியோகம் எதிர்காலத்தில் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

ஆகவே, பொது மக்கள் இயலுமான அளவு நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் விநியோக வடிகாலமைப்பு சபை வலியுறுத்தியுள்ளது.

எதிர்வரும் டிசெம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை போதுமான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply