• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேர்தல் மோசடி வழக்கு - 25ம் தேதிக்குள் டிரம்ப் ஆஜராக உத்தரவு

அமெரிக்காவில் கடந்த 2017 முதல் 2021-ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தவர் டிரம்ப். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலிலும் குடியரசு கட்சி சார்பில் இவர்தான் முன்னிலை வகிக்கிறார். டிரம்ப்மீது தனக்கு எதிராக பாலியல் புகார் அளித்த பெண்களுக்கு குற்றத்தை மறைப்பதற்காக பணம் வழங்குதல், வெள்ளை மாளிகையில் இருந்து ரகசிய ஆவணங்களை கடத்திச் சென்றது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. அதில், ஜார்ஜியா மாகாணத்தில் 2020-ம் ஆண்டு நடந்த தேர்தல் மோசடி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அந்த தேர்தலில் அவர் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனுடன் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

அந்த சமயத்தில் ஜோ பைடனுக்கு எதிரான வாக்குகளைக் கண்டறியும்படி உயர்மட்ட தேர்தல் அதிகாரி ஒருவருடன் டிரம்ப் போனில் பேசுவது போன்ற ஆடியோ அங்குள்ள சமூக வலைதளங்களில் கசிந்தது. ஆனால் இந்த வழக்குகள் தனக்கு எதிராக தொடுக்கப்பட்ட சதி எனக்கூறி வரும் டிரம்ப் தன்மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருகிறார். எனினும் தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்றதாக டிரம்ப் மற்றும் அவருக்கு உதவி செய்த 18 பேர் மீது தேர்தல் மோசடி வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை அங்குள்ள ஜார்ஜியா மாகாண கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில், குற்றப்பத்திரிகையில் உள்ள 19 பேரிடமும் ஒரே நேரத்தில் விசாரணை நடத்த கோர்ட்டு முடிவு செய்தது. எனவே டிரம்ப் உள்பட வழக்கில் தொடர்புடைய 19 பேரும் கைது வாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. அதேசமயம் வருகிற 25-ந் தேதிக்குள் தாமாக முன்வந்து ஆஜராக வாய்ப்பு அளிக்கப்பட்டது.
 

Leave a Reply