• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மதத்தலைவர்களே மக்களை வழிநடத்த வேண்டும் - வத்திக்கான் பிரதிநிதி

இலங்கை

மதத்தலைவர்கள் சரியான கொள்கையை நோக்கி மக்களை வழி நடத்துவதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி பிறைன் உடைக்குவே ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மன்னார் மடுத்திருத்தலத்தில் இடம்பெற்ற திருப்பலி நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

2015 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி திருத்தந்தை இந்த நாட்டிற்கு விஜயம் செய்திருந்தார்.

அன்றைய நாளில் அவருக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட மடு அன்னை திருச் சொரூபத்தை அவர் இன்று வரை போற்றுகின்றார்.

உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் வடுக்களை விட்டுச் சென்ற, 26 வருடங்கள் நீடித்த உள்நாட்டு போரின் தாக்கங்களை நாம் மறந்து விட முடியாது.

2 வாரங்களுக்கு முன்னர் யாழ் மறை மாவட்டத்திற்கு நான் மேற்கொண்டிருந்த மீட்புப்பணி விஜயத்தின் போது மக்கள் மீதும், கைவிடப்பட்ட வீடுகள் மீதும், உடமைகள் மீதும் போரின் தாக்கம் எவ்வாறு இருந்தது என்பதை பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

மீண்டும் ஒரு போர் வேண்டாம். இன, மத, மொழி, சாதி, கருத்து போன்ற வேற்றுமைகளுக்கு அப்பால் அன்பும்,அமைதியும் சகிப்புத்தன்மையும் நிலை பெற வேண்டும்.

இது நல்லிணக்கத்திற்கான நேரமாகும். வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான ஜனாதிபதியுடன் சந்திப்பு போன்ற முயற்சிகள் ஊடாக, நாட்டில் நல்லிணக்கத்தை எட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம்.

ஜனாதிபதி நாடாளுமன்றில் ஆற்றிய உரையில் தெளிவாக குறிப்பிட்டது போல அனைவரும் நன்கு அறிந்த குழப்பமான விடையங்களை போதுமான அளவில் தீர்த்து வைக்கும் வகையில் இந்த செயன்முறைகள் அமையும் என நாங்கள் நம்புகிறோம்.

குறைவாக உள்ள சிறு குழுவினர் உங்கள் மீது எதிர் மறையாக செல்வாக்கு செலுத்தவோ, திசை திருப்பவோ அனுமதிக்க வேண்டாம்.

மதத்தலைவர்கள் சரியான கொள்கையை நோக்கி மக்களை வழி நடத்துவதில் முன்னனி பங்கு வகிக்க வேண்டும்.

எந்த ஒரு மதத்தலைவரும் தமக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பங்கள், மதிப்பு, சலுகைகளை பயன்படுத்தி ஏனைய மதங்களைஇழிவு படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply