• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடாளுமன்றம் – நீதிமன்ற மோதல் ஜனாதிபதியின் நாடகம் - சாணக்கியன் குற்றச்சாட்டு

இலங்கை

ஜனாதிபதி தான் விரும்புகின்ற நேரத்தில் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற தனது கையாட்களை வைத்து சிறப்புரிமைகளை எழுப்பிக் குழப்பங்களை ஏற்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்ற சிறப்புரிமையை ஆட்சியாளர்கள் தங்களுக்கு தேவையான முறையில் பயன்படுத்துகின்றார்கள்.

இதனால்தான் நாடாளுமன்றத்தினைக் கூட அரசாங்கம் தமது தேவைக்காகப் பயன்படுத்துகின்றதா என்ற சந்தேகம் எமக்கு தற்போது எழுகின்றது.

நாடாளுமன்ற சிறப்புரிமையைக்கூட இன்று ஆட்சியாளர்கள் தமது தேவைகளுக்காகப் பயன்படுத்துகின்றனர்.

அண்மைக்காலச் செயற்பாடுகளை அவதானித்தால் நாட்டின் நீதிமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையில் குழப்பநிலையினை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றார் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

மேலும் தேர்தலுக்கான நிதியினை விடுவிக்காமல் தனது நிறைவேற்று அதிகாரத்தினைப் பயன்படுத்தித் தடுப்பது போன்ற விடயங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறும் செயலாகும்.

எனவே இந்த விடயத்தில் ஜனாதிபதி தான் விரும்புகின்ற நேரத்தில் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற தனது கையாட்களை வைத்து சிறப்புரிமைகளை எழுப்பி இவ்வாறான குழப்பங்களை ஏற்படுத்துகின்றார்.

எனவே எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகள்; தொடர்பாக நாம் அவதானத்துடன் செயற்பட வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
 

Leave a Reply