• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விவசாயத்துறையை நவீனமயப்படுத்தல் தொடர்பாக ஜனாதிபதி விசேட பணிப்புரை

இலங்கை

விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகள் மூலம் நாட்டின் விவசாயத்துறையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

விவசாயத்துறை நவீனமயப்படுத்தல் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விவசாயத்துறை நவீனமயப்படுத்தல் தொடர்பாக ஜனாதிபதிக்கும் விவசாய துறை அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது விவசாயம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான செயலணியொன்றை உருவாக்கவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, பெருந்தோட்ட நீர்பாசன, மாகாவலி அபிவிருத்தி அமைச்சுக்களை இணைத்து தனியார் துறையின் பங்கேற்புடன் மேற்படி செயலணியை நிறுவ எதிர்பார்த்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாய நவீன மயப்படுத்தலுக்கான செயலகமொன்றை ஸ்தாபிப்பதற்கான வரைவு மற்றும் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையொன்றை இரு வாரங்களுக்குள் பெற்றுத்தருமாறு அதிகாரிகளுக்கு வலியுறுத்திய ஜனாதிபதி, தேவை ஏற்படுமாயின் அச்செயற்பாடுகளுக்காக நாடாளுமன்ற குழுவொன்றை நியமிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

விவசாயம் இந்நாட்டு பொருளாதாரத்தின் பிரதான அங்கமாக காணப்படுகிறது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதனை அமைச்சு அல்லது சில நிறுவனங்களுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்த முடியாதெனவும், அரச மற்றும் தனியார் துறைகள் உரிய ஒருங்கிணைப்புடன் விவசாயத்தை நவீனமயப்படுத்தும் பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல் பழமையான முறைமைகளுக்கு மாறாக புதிய முறையில் சிந்தித்து சிறந்த பிரதிபலன்களை அடையும் வகையில், விவசாயத்தை நவீனமயப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இதுவரையில் விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் மாத்திரமே இடம்பெற்றதாகவும், அதனால் நாட்டுக்கு எவ்வித பலன்களும் கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உரிய முகாமைத்துவத்தின் கீழ் விவசாய திட்டமிடல்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், நவீன விவசாய உபகரணங்களை உற்பத்தி செய்யும் தாய்லாந்து போன்ற நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் ஜனாதிபதி விவசாய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

காலநிலை மாற்றம் தொடர்பான இலக்குகளை அடையும் வகையில் இந்த பணிகளை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், முறையான நீர் முகாமைத்துவத்தை பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி விளக்கியுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, துறைசார் அமைச்சுகளின் செயலாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இக்கலந்துரையாடலில் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply