• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கதாநாயகி தேடும்படலம் தொடங்கியது

சினிமா

பள்ளி மாணவி ஒருவருக்குப் பதின் வயதிலேயே திருமணம்  நடந்து விடுகிறது. ஒரு விபத்தில் கணவன் இறந்து விடுகிறான். அதனால் மனநிலை பாதித்த அவள், தனக்குச் சிகிச்சை அளிக்கும் டாக்டரைக் காதலிக்கத் தொடங்குகிறாள். அந்த டாக்டரோ ஏற்கெனவே ஒரு பெண்ணைக் காதலித்துக்கொண்டிருக்கிறார்.

இந்தக் கதைக்குக் கதாநாயகி தேடும்படலம் தொடங்கியது. இவரைப் போடலாம், அவரைப் போடலாம் என்று சித்ராலயா கோபு ஆலோசனை வழங்கிக்கொண்டிருக்க, ஸ்ரீதர் அவரை யோசனையுடன் பார்த்தார். “கோபு.. இந்தக் கதையில் வரும் இளம் கைம்பெண் கதாபாத்திரத்துக்கு மேல்தட்டில் பிறந்து வளர்ந்த மாடர்ன் லுக் கொண்ட ஒரு டீன் முகம் தேவை, இந்த நிமிடம் முதல் தேடத் தொடங்கு” என்றார். கோபுவுக்குத் தலை சுற்றியது. நாட்கள் ஓடியதே தவிர நாயகி கிடைத்தபாடில்லை.

சித்ராலயா குழுவினர், எம்.என். நம்பியார் ஆகியோர் சைதாப்பேட்டையில் இருந்த ஜிம்கானா நீச்சல் குளத்துக்குப் போவது வழக்கம். ஒரு நாள் ஸ்ரீதரும் கோபுவும் நீச்சலுக்குச் சென்றிருந்தனர். அப்போது தற்செயலாக ஸ்ரீதரின் பார்வை அங்கே நீந்திக்கொண்டிருந்த பதினைந்து வயதே மதிக்கத்தக்கப் பெண்ணின் மீது விழுந்தது.

“கோபு…அந்தப் பெண்ணைப் பாரேன்..!'' என்று ஸ்ரீதர் காட்ட, திரும்பிப் பார்த்தார் கோபு. கான்வென்ட்  மாணவியின் முகமாகவும், நவ நாகரிகமாகவும் தோற்றமளித்தார் அந்தப் பெண். துறு துறு கண்களுடன், நளினமாக நடந்து, இவர்களைக் கடந்து சென்று, ஏணிப்படிகளில் ஏறி, ராக்கெட்டைப் போல் தலைகீழாக நீரில் பாய்ந்து, லாகவமாக மேலே வந்து டால்பினைப் போல் நீந்திக்கொண்டிருந்தார். “அந்தப் பெண் யாராக இருக்கும், கொஞ்சம் விசாரியேன்” என்று ஸ்ரீதர் சொல்ல, கோபுவுக்கு ஒரு யோசனை.

அந்தப் பெண்ணை பலமுறை அவர் நீச்சல் குளத்தில் பார்த்திருந்தார். ஒருநாள் அந்தப் பெண்ணுடன் அவருடைய தாயார் வந்திருந்தபோது அவருடன் நடிகர் வி.கோபாலகிருஷ்ணன் பேசிக்கொண்டிருந்ததை கோபு கவனித்திருந்தது நினைவுக்கு வந்தது.

கோபாலகிருஷ்ணன் கோபுவுக்கு நண்பர்தான். அவரிடம் போன் செய்து கேட்டபோது, “அந்தப் பெண், நடிகை சந்தியாவின் மகள். என் குடும்ப நண்பர் சந்தியா” என்றார் கோபாலகிருஷ்ணன். அவரிடம் சித்ராலயாவின் புதுப்படத்துக்குக் கதாநாயகி தேடும் படலத்தைச் சொல்லி, ‘அந்தப் பெண்ணை அழைத்தால் நடிக்க வருவாரா’ என்று கேட்டார். '

'நான் பேசி அழைத்து வருகிறேன்.'' என்று உறுதிதந்த வி.கோபாலகிருஷ்ணன், சொன்னபடியே அடுத்த இருநாட்களில் சந்தியாவையும் அவருடைய மகளையும் சித்ராலயா அலுவலகத்துக்கு அழைத்துக்கொண்டு வந்தார். அந்தப் பெண்தான் ஜெயலலிதா.

ஸ்ரீதர் ஜெயலலிதாவிடம் “எதையாவது பேசி நடித்துக் காட்டுங்க” என்றார். அடுத்த நிமிடம் ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகத்திலிருந்து மோனோ ஆக்ட்டிங் ஒன்றை நடித்துக் காட்டினார். அவரது ஆங்கில உச்சரிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. கதைப்படி கான்வென்டில் படித்த ஒரு பெண்ணின் கதை என்பதால் அந்தக் கதாபாத்திரத்துக்குச் கனகச்சிதமாகப் பொருந்தினார் ஜெயலலிதா.

ஸ்ரீதர் ‘வெண்ணிற ஆடை’ கதையை சந்தியாவிடமும், ஜெயலலிதாவிடமும் சுருக்கமாகச் சொன்னபோது, சந்தியா பதில் ஏதும் கூறவில்லை. “யோசித்துவிட்டுச் சொல்லுகிறோம்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டார்கள். பின்னர் கோபுவுக்கு போன் செய்துபேசினார் சந்தியா. “டைரக்டர்கிட்டச் சொல்லத் தயக்கமா இருக்கு, அம்மு நடித்த கன்னட படத்துலயும் அவளுக்குக் கைம்பெண் கேரக்டர்.

இப்போ ‘வெண்ணிற ஆடை’யிலும் அதே போன்ற கேரக்டர். மனசுக்குக் கஷ்டமா இருக்கு. வேண்டாம்னு பார்க்கிறேன்'' என்று சொல்ல,  சந்தியாவின் முடிவை ஸ்ரீதரிடம் தெரிவிப்பதாகக் கூறினார் கோபு. சந்தியா கூறியதை ஸ்ரீதரிடம் தெரிவிப்பதற்குள், சந்தியா வீட்டிலிருந்து மீண்டும் கோபுவுக்கு போன். இம்முறை ஜெயலலிதாவே பேசினார்.

“சினிமாவில் நடிப்பதுதான் புரஃபெஷன் என்று தேர்ந்தெடுத்து விட்டேன். பிறகு எந்தக் கதாபாத்திரமாக இருந்தால் என்ன? நான் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் இயக்குநரிடம் கூறிவிடுங்கள்'' என்று தெளிவாக, துணிவான குரலில் தெரிவித்தார் ஜெயலலிதா.

நன்றி : சிலம்பு செல்வன்.

Leave a Reply