• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தென்காசி அருகே ஓடும் ரயிலில் ஒரு சண்டைக் காட்சியை எடுக்கும் வேலையில் இறங்கினோம்

சினிமா

தென்காசி அருகே ஓடும் ரயிலில் ஒரு சண்டைக் காட்சியை எடுக்கும் வேலையில் இறங்கினோம். விசாரித்த போது அந்த ரயில்வே டிராக்கில் காலையில் ஒரு ரயில் போகும், மாலையில் ஒரு ரயில் திரும்பும் என்று கேள்விப்பட்டோம். இடைப்பட்ட நேரத்தில் ரயில் ஒன்றை வாடகைக்கு எடுத்து ஷூட்  பண்ணலாம் எனத் திட்டமிடப்பட்டது. பொதுவாக சண்டைக் காட்சிக்கு  என்று ஒரு பட்ஜெட் ஒதுக்கிக் கொள்வது வழக்கம். ஷூட்டிங் நடத்தும் இடத்தை பார்த்தபோது, கண்டிப்பாக பட்ஜெட்டில் மூணு, நான்கு லட்சம் அதிகம் செலவாகும் என்று தெரிந்தது.

சென்னைக்கு வந்து ஏவி.எம். சரவணன் சாரிடம், ‘‘அந்தக் காட்சியைப் படமாக்கணும்னா மூன்று நாட்கள் ரயிலை வாடகைக்கு எடுக்கணும். ஃபிலிம்மை நம்ம கண்ட்ரோல்ல வைத்து ஷூட் செய்ய முடியாது. அங்கே சென்று பார்த்ததில் கண்டிப்பா ஆறு முதல் ஏழு லட்சம் வரைக்கும் செலவாகும். உங்க பட்ஜெட்டுக்கு அது தாங்குமா? நீங்கதான் யோசித்துச் சொல்லணும்’’ என்றேன். அதற்கு சரவணன் சார், ‘‘மூன்று லட்சம் கூடுதலா செலவானா மேனேஜ் பண்ணிக்கலாம் முத்துராமன். ஆனா, எடுக்கப்போற ரயில் ஃபைட் மாதிரி தமிழ் படங்கள்ல இதுவரைக்கும் வரலைன்னு சொல்ற அளவுக்கு உங்களால எடுக்க முடியும்னா, பரவாயில்லை’’ என்றார்.

அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு படப்பிடிப்புக்கு அனுமதி பெற்றுக் கிளம்பி னோம். ஓடும் ரயிலிலேயே பல காட்சிகள் எடுக்கப்பட்டன. பாலத்துக்கு மேல் ரயில் போகும்போது ஃபைட் சீன்களை எடுக்கும் போது, கொஞ்சம் மிஸ் ஆனாலும் பாலத்தில் இருந்து கீழே விழ வேண்டியதுதான். அதனாலேயே பல காட்சிகளை டூப் போட்டு எடுக்கலாம் என்று ஜூடோ ரத்தினம் திட்டமிட்டி ருந்தார்.

‘‘டூப் போட்டு எடுத்தா, லாங் ஷாட் வெச்சிடுவீங்க. சீன்ல ஒரு ஈர்ப்பு இருக்காது. நானே ஃபைட் பண்றேன்’’ என்று சொல்லி, டூப்புக்கு ஒப்புக் கொள்ளவில்லை ரஜினி. ‘‘ரிஸ்க் ஆகிடும்… சார்’’ என மறுத்தோம். ‘‘எனக்கு ரிஸ்க் ஆகிடும்னு சொல்றீங்களே. எனக்கு டூப் போட்டு நடிக்கிறவரும் உயிருள்ள மனுஷன் தானே. அவருக்கு மட்டும் ரிஸ்க் இல்லையா?’’ என்று ரஜினி எங்களோடு விவாதம் செய்து, கடைசியில் அவரே அந்த ரயில் சண்டை காட்சிகளில் ஒரிஜினலாக நடித்தார். அந்த சண்டைக் காட்சி பெரிய அளவில் பெயர் வாங்கியது. ஆங்கிலப் படங்களுக்கு இணையாக பேசப்பட்டது அந்தக் காட்சி.  ‘முரட்டுக்காளை’ படத்தோட ரயில் சண்டை மாதிரி இருக்கணும்’னு அடுத்தடுத்து பல இயக்குநர்கள் உதாரணம் சொல்ல ஆரம்பிச்சாங்க. தங்களோட படங்களுக்கு அதே லொக்கேஷனில் படப்பிடிப்பும் நடத்தினாங்க.

--எஸ் பி முத்துராமன் 

Leave a Reply