• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விசா இன்றி இலங்கையில் தங்கிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டயானா கமகே – ஜனவரி 14ஆம் திகதி தண்டனை

இலங்கை

செல்லுபடியாகும் விசா அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்குத் தண்டனை விதிப்பதற்காக, குறித்த வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 14ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதற்கமைய, பிரதிவாதியான டயானா கமகேவை முன் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, பிரதிவாதியின் கைவிரல் அடையாளங்களைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.

2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதி முதல் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் செல்லுபடியாகும் விசா அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை தொடர்பில், குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்கு எதிராக இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கு இன்று (26) முற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த பிரதிவாதியான டயானா கமகே நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

இதன்போது, பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி மொஹான் செனவிரத்ன நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கையில், இக்குற்றச்சாட்டுக்களுக்குத் தாம் குற்றமற்றவர் என முன்னர் முன்வைத்த எதிர்வாதத்தைப் பிரதிவாதி மீளப் பெற்றுக்கொண்டு, அக்குற்றச்சாட்டுக்களுக்குக் குற்றத்தை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்தார்.

அதற்கமைய, அவ்விடயத்தைப் பதிவு செய்து கொண்ட நீதவான், பிரதிவாதிக்குத் தண்டனை விதிப்பதற்காக இவ்வுழக்கை மீண்டும் ஜனவரி மாதம் 14ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டார். 

அத்தினத்திற்கு முன்னதாகப் பிரதிவாதியின் கைவிரல் அடையாளங்களைப் பெற்று அறிக்கை கோருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a Reply