• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஐரோப்பா முழுவதும் ரஷ்யர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை

EU to tighten travel curbs on Russians: ரஷ்யர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக்குகிறது.

ரஷ்ய உளவுத்துறையால் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் ஒரு படுகொலையைத் தடுத்ததாகக் கூறியதைத் தொடர்ந்து, ரஷ்யாவை எதிர்த்து நிற்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு டென்மார்க் தனது சக ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளது.

செப்டம்பர் மாதம் அமெரிக்க-உக்ரேனிய இசைக் கலைஞர் ஒருவர் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்கு முன்னதாக, அவரைக்கொலை செய்ய ரஷ்ய உளவு அமைப்புகள் மேற்கொண்ட முயற்சியைத் தடுத்து நிறுத்தியதாக டென்மார்க் காவல்துறையும் பாதுகாப்பு அதிகாரிகளும் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

வெளிவிவகார அமைச்சர் லார்ஸ் லோக்கே ராஸ்முசென் இதனை ஏற்றுக்கொள்ள முடியாத அத்துமீறல் என்று குறிப்பிட்டதுடன், ரஷ்யாவின் தற்காப்பு இணை அதிகாரியை (defence attache) வெளியேற்றுவதாக டென்மார்க் நிர்வாகமும் அறிவித்தது.

இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த தூதர்கள், 29 நாடுகளை உள்ளடக்கிய 'ஷெங்கன்' (Schengen) சுதந்திரப் பயண மண்டலத்திற்குள் ரஷ்ய குடிமக்கள் நுழைவதற்கான கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என்று முன்மொழிந்தனர்.

ரஷ்ய குடிமக்களுக்கான சுற்றுலா விசாக்களை நிறுத்துவதற்கும், அந்த மண்டலம் முழுவதும் ரஷ்யாவின் பயோமெட்ரிக் அல்லாத கடவுச்சீட்டுகளை அங்கீகரிப்பதை நிறுத்துவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

டென்மார்க் தனது முன்மொழிவுகளை, திங்கட்கிழமை பிரஸ்ஸல்ஸில் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய தூதர்களின் கூட்டத்தில் சமர்ப்பிக்கும்.

ஷெங்கன் மண்டலம் முழுவதிலும் பயணம் செய்ய அனுமதி அளிக்காத, வரையறுக்கப்பட்ட விசாக்களை அதிக அளவில் பயன்படுத்துமாறும், ரஷ்யாவின் தற்போதைய மற்றும் முன்னாள் போராளிகளுக்கு நுழைவுத் தகுதிக்கான கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்குமாறும் மூத்த தூதர்களின் அந்தக்குறிப்பு உறுப்பு நாடுகளை வலியுறுத்துகிறது.

இதனிடையே, கோபன்ஹேகனில் உள்ள ரஷ்யத் தூதரகம், டென்மார்க்கின் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen, ஐரோப்பிய ஒன்றியம் டென்மார்க்குடனும், ரஷ்ய கலப்பினத் தாக்குதல்களால் குறிவைக்கப்பட்ட அனைத்து உறுப்பு நாடுகளுடனும் முழு ஒற்றுமையுடன் நிற்கிறது என்றார்.

மேலும், தயார்நிலையையும் தடுப்பு நடவடிக்கைகளையும் வலுப்படுத்துவதற்காக, அந்த கூட்டமைப்பு விரைவில் ஒரு புதிய ஐரோப்பிய பாதுகாப்பு உத்தியை முன்மொழியும் என்று அவர் கூறியுள்ளார்.

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதையடுத்து, அந்த நாட்டுக்கு எதிராக ஐரோப்பிய ஆணையம் தனது 22-வது தடைகள் தொகுப்பை விரைவில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது. விசா கட்டுப்பாடுகளும் பரிசீலிக்கப்படும் நடவடிக்கைகளில் அடங்கும்.
 

Leave a Reply