ஈழத்தின் தலைசிறந்த கவிஞர் பேராசிரியர் உருத்திரமூர்த்தி சேரன் காலமானார்
கனடா
ஈழத்தின் தலைசிறந்த நவீன கவிஞரும், சமூகவியல் பேராசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான பேராசிரியர் உருத்திரமூர்த்தி சேரன் தன66 ஆவது வயதில் கனடா டொரொன்டோ நகரில் நேற்று (18) இரவு காலமானார்.
சிறுநீரக நோய்க்காகச் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவரது உயிர் பிரிந்துள்ளதாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 1960 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், அளவெட்டியில் பிறந்த பேராசிரியர் உருத்திரமூர்த்தி சேரன் , ஈழத்தின் புகழ்பெற்ற கவிஞர் மஹாகவி (து. உருத்திரமூர்த்தி) அவர்களின் மகனாவார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் விஞ்ஞானத்தில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்ற சேரன், பின்னர் நெதர்லாந்தில் முதுகலைப் பட்டத்தையும், கனடாவின் யோர்க் பல்கலைக்கழகத்தில் (York University) சமூகவியலில் முனைவர் பட்டத்தையும் (PhD) பெற்றார்.
கனடாவின் வின்ட்சர் பல்கலைக்கழகத்தில் (University of Windsor) சமூகவியல் மற்றும் மானுடவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய இவரது புலம்பெயர் தமிழர்கள், இனத்துவ மோதல்கள் மற்றும் இடப்பெயர்வு குறித்த ஆய்வுகள் சர்வதேச அளவில் கவனம் பெற்றவை.
1980களில் ஈழத்தில் ஏற்பட்ட போர்ச்சூழல், இனக்கலவரங்கள் மற்றும் 1981 யாழ் பொது நூலக எரிப்பு ஆகியவற்றின் வலிகளையும், மக்களின் உணர்வுகளையும் தனது கவிதைகள் வழியாக உலகறியச் செய்தவர் சேரன்.
இரண்டாவது சூரிய உதயம், யமன், கானல் வரி, எலும்புக் கூடுகளின் ஊர்வலம், நீ இப்பொழுது இறங்கும் ஆறு, மீண்டும் கடலுக்கு மற்றும் காடாற்று ஆகியவை இவரது முக்கியக் கவிதைத் தொகுப்புகளாகும்.
அத்துடன், மரணத்துள் வாழ்வோம் (1985) எனும் புகழ்பெற்ற ஈழத்துப் போராட்டக் கவிதைத் தொகுப்பினையும் இவர் இணைந்து தொகுத்திருந்தார். 1980களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த Saturday Review ஆங்கில வார இதழில் ஊடகவியலாளராகப் பணியாற்றி மனித உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்த இவர், 2016 ஆம் ஆண்டில் மதிப்புமிக்க 'ஓ.என்.வி சர்வதேச இலக்கிய விருதினை' (ONV International Literary Award) பெற்றார்.
ஆங்கிலம், சிங்களம், பிரெஞ்சு, ஜேர்மன் உட்பட 20 இற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இவரது படைப்புகள் உலகத் தமிழ் இலக்கியப் பரப்பில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளன.
ஈழத்துப் போர்க்கால இலக்கியத்திற்கும், புலம்பெயர் தமிழ் அறிவுசார் தளத்திற்கும் பேராசிரியர் சேரனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்






















