• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரஷ்யாவிற்கு எதிராக கனடாவின் அதிரடி முடிவு

எதிர்வரும் உலக இளையோர் ஐஸ் ஹொக்கி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடுவதற்காக ரஷ்ய வீரர்களுக்கு விசா வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய அரசாங்கம் இது தொடர்பில் 'ஹொக்கி கனடா' அமைப்பிற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அத்துடன், கனடாவிலுள்ள அணிகளுக்காக விளையாடுவதற்கு ஏற்கனவே செல்லுபடியாகும் விசாக்களைக் கொண்டுள்ள ரஷ்ய வீரர்களும், நடுநிலைக் கொடியின் கீழ் கூட இத்தொடரில் பங்கேற்கத் தகுதியற்றவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கனடாவின் விளையாட்டுத்துறை இராஜாங்கச் செயலாளர் அடம் வான் கோவெர்டன் கருத்து வெளியிட்டுள்ளார்.

"ரஷ்ய மற்றும் பெலாரஸ் நாட்டு விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ஏற்கனவே செல்லுபடியாகும் விசாக்களை வைத்திருந்தாலும், போட்டிகளில் பங்கேற்பதற்காக கனடாவிற்குள் நுழைவதைத் தடுப்பதற்கும், ஒவ்வொருவரையும் தனித்தனியாக மதிப்பீடு செய்வதற்கும் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்" எனக் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கைகள் ரஷ்ய மற்றும் பெலாரஸ் மக்களுக்கு எதிரானவை அல்ல. மாறாக, கனடாவில் நடத்தப்படும் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளைத் தமது அரசாங்கங்களின் பிரதிநிதித்துவம், அரசியல் அங்கீகாரம் மற்றும் பிரச்சாரத்திற்கான தளங்களாக ரஷ்ய மற்றும் பெலாரஸ் அரசாங்கங்கள் பயன்படுத்துவதைத் தடுப்பதே இதன் நோக்கமாகும் என தெரிவித்துள்ளார்.

நடுநிலைத் தன்மையுடன் தனிப்பட்ட முறையில் போட்டியிடும் வீரர்கள் மாத்திரமே கனடாவில் நடைபெறும் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்க முடியும் என்பதே கனடாவின் நிலையான கொள்கையாகும் என அவர் மேலும் தெரிவித்தார். 

Leave a Reply