ஒன்ராறியோவில் இளைஞர் மீது இனவெறுப்பு தாக்குதல் - மூன்று பேர் கைது
கனடா
3 teens charged with hate motivated offences after assaults on transit buses: பேருந்தில் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பதின்மவயதினர் மீது இனவெறுப்பு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கனடாவில், பேருந்து ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த சீக்கிய இளைஞர் ஒருவர் இனரீதியாக தாக்கப்பட்ட விடயம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில், கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள Barrie நகரில் 22 வயதுடைய சீக்கிய இளைஞர் ஒருவர் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது, அந்தப் பேருந்தில் ஏறிய மூன்று இளைஞர்கள் அவரை வம்பிழுத்துள்ளார்கள்.
அவர்களில் ஒருவர், அந்த சீக்கிய இளைஞரின் தலைப்பாகையை அகற்றி, அவரது தலையில் மதுபானத்தை ஊற்றியுள்ளார்.
அந்த சீக்கிய இளைஞர் பொலிசாரை அழைக்க முயல, அவரது மொபைலைப் பறித்து தரையில் வீசியுள்ளார் ஒருவர்.
அந்த சீக்கிய இளைஞர் பேருந்து சாரதியின் உதவியைக் கோர முயல, அவர்களில் இருவர் அவரைப் பிடித்துவைத்துக்கொள்ள, மூன்றாவது நபர் அவரது முகத்திலும் உடலிலும் குத்தியுள்ளார்.
பின்னர் பேருந்திலிருந்து இறங்கிய அந்த மூன்று பேரும், டெக்ஸி ஒன்றின் உதவியுடன் தப்பியோடியுள்ளனர்.
விடயம் என்னவென்றால், அந்த சீக்கிய இளைஞரைத் தாக்கும் முன், சுமார் 7.15 மணியளவில் மற்றொரு பேருந்தில் ஏறிய இதே இளைஞர்கள் 26 வயதுடையை மற்றொரு நபரை மோசமான வார்த்தைகளால் விமர்சித்ததுடன், அவரை அறைந்தும் உள்ளனர்.
தகவலறிந்த பொலிசார், தப்பியோடிய அவர்கள் மூன்று பேரையும் 9.00 மணிக்கு முன் பிடித்துவிட்டார்கள்.
முறையே 16, 18 மற்றும் 19 வயதுடைய அந்த மூன்று பேர் மீதும், இனவெறுப்புத் தாக்குதல் தொடர்பில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், அந்த சீக்கிய இளைஞர் தாக்கப்பட்டதற்கு கனடாவிலுள்ள சீக்கிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
The World Sikh Organization என்னும் அமைப்பு சமூக ஊடகமான எக்ஸில் பதிவிட்டுள்ள செய்தி ஒன்றில், இந்தச் சம்பவங்களைத் தனிப்பட்ட செயல்களாகக் கருதி ஒதுக்கிவிட முடியாது என்று கூறியுள்ளது.
சீக்கியர்கள் மீதான அதிகரித்து வரும் தாக்குதல்கள், கனேடிய சீக்கியர்கள் பாதுகாப்பாக வாழ்வதை உறுதிசெய்ய தீவிர கவனம், பொறுப்புக்கூறல் மற்றும் நடவடிக்கைகள் தேவை என்பதையே காட்டுகின்றன என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.





















