ஏமன் தலைநகரை அதிர வைத்த வான்வழி தாக்குதல் - 22 பேர் உயிரிழப்பு
ஏமன் தலைநகர் சனா அருகே உள்ள அல்-ஷரியா என்ற நகரத்தில் சவுதி படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், விமான நிலையங்கள் உள்பட பல்வேறு பகுதிகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது ஏமன் அரசுப்படையுடன் இணைந்து சவுதியும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஏமன் நாட்டின் தலைநகர் சனா அருகே உள்ள அல்-ஷரியா என்ற நகரத்தில் சவுதி படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று ஏமனின் தெற்கு பகுதியில் உள்ள மார்க்கெட் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்களும், சவுதி ஆதரவு ஏமன் அரசுப்படைகளும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






















