சென்னையில் ராமாயணா பட விழா - ஊர்வசி டேக்இட் ஈஸி ஊர்வசி... பாடலை பாடி உற்சாகப்படுத்திய யாஷ்
சினிமா
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ராமாயணா’. அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி உள்ள இந்த படம் தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 6-ந்தேதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது. இதையொட்டி அமேசான் மியூசிக் வழங்கிய ‘ராமாயணா’ திரைப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் நடிகர்கள் ரன்பீர் கபூர், யாஷ், ரவி துபே, நடிகைகள் சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியையொட்டி ஏ.ஆர்.ரகுமான், ‘ராமாயணா’ திரைப்படத்தின் இசைத் தொகுப்பிலிருந்து சில பாடல்களை நேரடியாகப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். ‘யாஷ்’ பேசும்போது, “ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளியான ஜென்டில்மேன், காதலன் போன்ற படங்களின் பாடல்களுக்கு நான் நடனமாடி உள்ளேன்” என்று பேசியதுடன் காதலன் படத்தில் இடம் பெற்ற “ஊர்வசி டேக்இட் ஈஸி ஊர்வசி...” பாடலின் சில வரிகளை பாடினார். இதைக்கேட்ட ரசிகர்கள் கைத்தட்டியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர்.
நடிகை சாய் பல்லவி பேசியதாவது:-
பொதுவாக எனக்கு மேடையில் பேசுவதென்றால் பயம். நான் ஏ.ஆர். ரகுமானின் மிகப்பெரிய ரசிகை. பள்ளி, கல்லூரிகளில் அவரது பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்தோம். ராமாயணா படத்தில் தமிழில் எழுதி இருக்கிற வசனங்கள் எல்லாம் நல்ல தமிழ் படத்துக்கு எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. ராமாயணா காவியத்தில் சீதாதேவி கேரக்டரில் நடித்தது என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம் மற்றும் பாக்கியம். ஒட்டுமொத்த இந்திய மக்களும் ராமாயண காவியத்தை தங்களது சொந்த தாய்மொழியில் திரையரங்குகளில் கண்டு மகிழ வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி படத்தை திரையரங்குகளில் 3 டி தொழில்நுட்பத்தில் பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.





















