ரூ.36.5 மில்லியனும் அதிகம் பெறுமதியான தங்க நகைகளுடன் தொழிலதிபர் கைது
இலங்கை
நாட்டிற்குள் தங்க நகைகளை மறைத்து கடத்தி வந்து, கட்டுநயாக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) அவற்றை வெளியே கொண்டு செல்ல முயன்றதாகக் கூறப்படும் சம்பவத்தில் இலங்கை பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி, பல்லேகலையைச் சேர்ந்த 51 வயதான இந்த வர்த்தகர், நேற்று (03) காலை சுமார் 9.30 மணியளவில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் EK-650 மூலம் விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது உடலில் நான்கு பொட்டலங்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 996 கிராம் எடையுள்ள தங்க நகைகளைக் கண்டறிந்த விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB), சந்தேக நபரை கைது செய்தனர்.
இந்தத் தங்க நகைகளின் பெறுமதி 36.5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மேலதிக விசாரணைகளுக்காக அந்தப் பயணியும் தங்க நகைகளும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
இன்று (04) அதிகாலை சுமார் 4.45 மணி வரை நடைபெற்ற முறையான சுங்க விசாரணையைத் தொடர்ந்து, அந்தத் தங்க நகைகளைப் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டதுடன், அப்பயணிக்கு 3.7 மில்லியன் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.






















