• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலக எண்ணெய் சந்தைக்கு புதிய நெருக்கடி - சவூதி எண்ணெய் இருப்பு தீரும் அபாயம்

சவூதி அரேபியாவின் முக்கிய கிழக்கு–மேற்கு எண்ணெய் குழாய் வலையமைப்பு சில நாட்களுக்குள் மீண்டும் இயக்கப்படாவிட்டால், யான்பு துறைமுகத்தில் உள்ள எண்ணெய் இருப்பு தீர்ந்து, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 4% வரை பாதிப்பு ஏற்படக்கூடும் என எண்ணெய் வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சமீபத்தில் இடம்பெற்ற ஆளில்லா விமானத் தாக்குதல்களால் குழாய் வலையமைப்பு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக யான்பு துறைமுகத்தில் தற்போது 5 முதல் 7 நாட்களுக்கு மட்டுமே போதுமான ஏற்றுமதி இருப்பு உள்ளதாக தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

குறித்த குழாய் மூலம் நாளொன்றுக்கு சுமார் 4 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் யான்புவுக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது.

மாற்று வழியாக எண்ணெயை ஏற்றுமதி செய்யும் வசதிகள் இருந்தாலும், அவற்றின் சேமிப்பு இருப்புகளும் வரையறுக்கப்பட்டவை என தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA), ஹோர்மூஸ் மற்றும் செங்கடல் வழியாக எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் சவூதி அரேபியாவின் எண்ணெய் விநியோகம் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி, போருக்கு முன்னர் நாளொன்றுக்கு 10.9 மில்லியன் பீப்பாய்களாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 6.2 மில்லியன் பீப்பாய்களாக குறைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலை நீடித்தால், ஏற்கனவே அதிகரித்துள்ள உலகளாவிய எரிபொருள் விலைகள் மேலும் உயர்ந்து, சர்வதேச பணவீக்க அழுத்தம் தீவிரமடையும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply