நாமலைப் போல என்னையும் கைது செய்திருக்கலாம்! ஆவலாக கேட்கும் சாமர
இலங்கை
நாமல் ராஜபக்சவைக் கைது செய்ததன் மூலம், இந்த அரசாங்கம் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் நாமல் தரப்பு ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு உதவி செய்துள்ளது, அதுபோல என்னையும் கைது செய்து சுதந்திரக் கட்சியின் பேரணிக்கு அரசாங்கம் உதவி செய்திருக்கலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“எமது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்சவை கைது செய்து இந்த அரசாங்கம் தற்போது விளக்கமறியலில் வைத்திருக்கின்றது. ஆனால், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முறைமையே முழுமையாக தவறானது.
முதலில், நாமல் ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கி நிமல் பெரேரா என்பவர், ஒரு திருடன். அவர் இந்த நாட்டில் கொள்ளையடித்து, சொத்துக்களைக் குவித்து, கோடீஷ்வரராக மாறிய பின்னர், தற்போது வெளிநாடொன்றில் சென்று வசிக்கின்றார்.
அப்படி வெளிநாட்டில் சென்று வசிக்கும் ஒரு மோசடிக்காரர் வழங்கிய வாக்குமூலத்தின்படி இந்த அரசாங்கம் நாமலைக் கைது செய்துள்ளது.
முதலில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஒரு விடயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும், இலஞ்சம் கொடுப்பதும் தவறு, இலஞ்சம் பெறுவதும் தவறு.
அப்படியாயின், இலஞ்சம் கொடுத்த நிமல் பெரேராவை முதலில் நாட்டுக்கு அழைத்து வந்து கைது செய்திருக்க வேண்டும். அதன் பின்னரே இலஞ்சம் பெற்றவரைக் கைது செய்திருக்க வேண்டும்.
இந்த அரசாங்கம், நாமல் ராஜபக்சவைக் கைது செய்து, அவர் தலைமையில் 12ஆம் திகதி நடைபெறவிருந்த கூட்டத்திற்கு சாதகமான நிலையைத் தோற்றுவித்துள்ளது. நாமல் ராஜபக்சவுக்கு அரசாங்கம் உதவி செய்திருக்கின்றது.
இதேபோல செப்டெம்பர் 2ஆம் திகதி எமது சுதந்திரக் கட்சியின் கூட்டம் ஒன்றும் இருந்தது. இந்த அரசாங்கம் அப்போது எமக்கு உதவி செய்திருக்கலாம். அந்தக் கூட்டத்தின்போது, என்னையும் கைது செய்திருந்தால், எங்களுடைய கட்சியின் கூட்டமும் வெற்றிபெற்றிருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.






















