ஜேசன் சஞ்சய் பேச தொடங்கியதும் TVK... TVK... என அதிர்ந்த அரங்கம்
சினிமா
உங்கள் எல்லோராலும் ‘சிக்மா’ படத்துடன் இணைந்துக் கொள்ள முடியும் என நம்புவதாக ஜேசன் சஞ்சய் தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் ‘சிக்மா’. படத்தில் கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். வருகிற அக்டோபர் 2-ந்தேதி படம் திரைக்கு வருகிறது. இதையொட்டி படத்தின் முன்னோட்ட விழா சேலத்தில் நடந்தது. விழாவில் ஜேசன் சஞ்சய் பேசியதாவது:-
முதலில் என் குடும்பத்துக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். (இவ்வாறு அவர் கூறியதும் கூட்டத்தில் இருந்து டி.வி.கே., டி.வி.கே என சப்தம் எழுந்தது.) இதை கேட்டதும் ஜேசன் சஞ்சய் கட்டை விரலை உயர்த்தி காட்டினார். சிக்மா நான் டைரக்ஷன் பண்ணிய முதல் படம் அக்டோபர் 2-ந்தேதி திரைக்கு வருகிறது. நம் எல்லோருக்கும் சிக்மா ‘மூவ்மென்ட்’ இருந்திருக்கும்.
அதாவது பெரிய கஷ்டத்தில் விழுந்திருப்போம். அப்போது நாம் எடுத்த ஒரு முடிவினால் அதில் இருந்து எப்படியாவது எழுந்து வந்து நம் மொத்த வாழ்க்கையும் மாறி இருக்கும். அப்படிப்பட்ட சராசரி மனிதனின் வாழ்க்கையில் நடப்பதுதான் இந்த ‘சிக்மா’. உங்கள் எல்லோராலும் இந்த படத்துடன் இணைந்துக் கொள்ள முடியும் என நான் நம்புகிறேன்.
தொடர்ந்து அவரிடம் தொகுப்பாளர் கேட்ட கேள்விகளுக்கு ஜேசன் சஞ்சய் அளித்த பதில்கள் வருமாறு:-
Q
நீங்கள் தியேட்டரில் பார்த்த முதல் படம்?
A
‘திருமலை’ படம். அப்போ எனக்கு 3 வயது.
Q
டைரக்டர் ஆக வேண்டும் என தோன்ற வைத்த படம்?
A
‘சிட்டி ஆப் கார்ட்’ என்ற படம்தான் என்னை ரொம்ப இன்ஸ்பயர் பண்ணியது.
Q
முதல் முதலில் அதிகாரப்பூர்வமாக டைரக்டர் ஆகி விட்டேன் என்று யாரிடம் சொன்னீர்கள்?
A
எங்கள் அம்மாவிடம் சொன்னேன். அம்மாவுக்கு பெரிய சந்தோஷம்.
Q
கல்லூரியில் 60 சதவீதம் அட்டெண்டன்ஸ் இருந்தால் டீச்சரை எப்படி சமாளிப்பீர்கள்?
A
60 சதவீதம் அட்டென்டன்ஸ் கம்மியா? எனக்கு தெரிந்து இல்லை. நான் 40 தாண்ட மாட்டேன் என்று நினைக்கிறேன். நீங்க யாரும் இதை பாலோ பண்ண வேண்டாம் (மாணவர்களை நோக்கி).
இவ்வாறு அவர் பேசினார்.






















