ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் ஷூட்டிங் அப்டேட் - புது வீடியோ வெளியிட்ட படக்குழு
சினிமா
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை 'ஓ மை கடவுளே' மற்றும் 'டிராகன்' திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் தர்மன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்த வீடியோவில், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, ரஜினிகாந்த் தனது வழக்கமான ஸ்டைலுடனும் கம்பீரத்துடனும் நடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
‘தர்மன்’ படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர், ' பேட்ட ' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் உடனும், 'பஞ்சதந்திரம்' மற்றும் 'பம்மல் கே சம்பந்தம்' படங்களுக்குப் பிறகு கமல்ஹாசனுடனும் மீண்டும் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மிஷ்கின் மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அதனை இதுவரை படக்குழு உறுதி செய்யவில்லை. படத்தின் மற்ற விவரங்கள் தற்போதைக்கு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
‘தர்மன்’ படத்திற்கு அனிருத் இசையமைக்க, ஒளிப்பதிவாளராக நிகேத் பொம்மியும் படத்தொகுப்பை பிரதீப் இ ராகவ் கையாள்கிறார். புகழ்பெற்ற சண்டைக் கலை இயக்குநர்களான அன்பரிவ் சகோதரர்கள் இந்தப்படத்தில் இடம்பெறும் சண்டை காட்சிகளை படமாக்குகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பரில் சுந்தர் சி இப்படத்தின் இயக்குநராக முதலில் அறிவிக்கப்பட்டார், ஆனால் அவர் திடீரென இப்படத்தில் இருந்து விலகினார். பின்னர் , 'ஓ மை கடவுளே' மற்றும் 'டிராகன்' திரைப்படங்களை இயக்கிய இயக்குநனர் அஷ்வத் மாரிமுத்து இந்தப் படத்தை இயக்குவதாக தயாரிப்பாளர்களால் உறுதி செய்யப்பட்டது.






















