• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முதுகு சொறிவதற்கே 300 யுவான் - சீனாவில் வைரலாகும் வித்தியாசமான தொழில்

சீனாவில் முதுகு சொறியும் சேவையை வணிகமாக மாற்றிய தொழில்முனைவோர் ஒருவர், அதனை வெற்றிகரமாக நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவின் ஷென்சென் நகரில் 32 வயதான ஜாங் சியாவோகியா (Zhang Xiaoqiao) என்பவர் ‘சுமா’ (Suma) என்ற பெயரில் இந்த சேவை நிலையங்களை நடத்தி வருகிறார்.

இங்கு ஒரு மணிநேர அமர்வுக்கு சுமார் 300 யுவான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நகங்களைப் பயன்படுத்தி, உடலின் பல்வேறு பகுதிகளில் ஊழியர்கள் மென்மையாக சொறிந்து விடுகின்றனர்.

இந்த சேவை மன அழுத்தத்தைக் குறைக்கவும், நிம்மதியான தூக்கத்தைப் பெறவும் உதவுவதாகக் கூறப்படுகிறது. இந்த சேவையைப் பெறுவோரில் சுமார் 70 சதவீதம் பேர் ஆண்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சமூக வலைத்தளத்தில் பார்த்த காணொளி ஒன்றும், தனது சிறுவயது நினைவுகளுமே இந்தத் தொழிலைத் தொடங்குவதற்கான உத்வேகத்தை வழங்கியதாக ஜாங் சியாவோகியா தெரிவித்துள்ளார்.

தற்போது இரண்டு கிளைகளுடன் இயங்கி வரும் இந்த நிறுவனம், மாதந்தோறும் சுமார் 100,000 யுவான் வரை வருமானம் ஈட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வணிகம் தொடர்ந்து இலாபகரமாக இயங்கி வரும் நிலையில், எதிர்காலத்தில் சீனா முழுவதும் 100 கிளைகளைத் திறப்பதை இலக்காகக் கொண்டு நிறுவனம் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முதுகு சொறிவதையும் ஒரு வணிகமாக மாற்றியுள்ளமை தொடர்பாக இணையவாசிகள் சமூக வலைத்தளங்களில் பல்வேறு நகைச்சுவையான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
 

Leave a Reply