• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நெஞ்சில் குடியிருக்கும் - முதலமைச்சர் விஜய்யின் பயோபிக் தலைப்பு குறித்து மனம் திறந்த அஸ்வத் மாரிமுத்து

சினிமா

திரையுலகில் உச்சம் தொட்ட விஜய், தீவிர அரசியலில் களமிறங்க எடுத்த முடிவை அந்தத் திரைப்படத்தின் முக்கிய இடைவேளைக் காட்சியாக வைப்பேன் என அஷ்வத் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது நடிகர் மற்றும் முதலமைச்சரான ஜோசப் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தைக் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மிகவும் சுவாரஸ்யமான பதில்களை அளித்துள்ளார். 'ஓ மை கடவுளே' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'டிராகன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் 'தர்மன்' திரைப்படத்தை இயக்கி வரும் அவர், இந்த பயோபிக் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.

ஒருவேளை முதலமைச்சர் விஜய்யின் பயோபிக்கை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால், அதற்கு "நெஞ்சில் குடியிருக்கும்" என்று தலைப்பிடுவேன் என அஸ்வத் மாரிமுத்து கூறியுள்ளார். மேலும் அப்படத்தின் திரைக்கதை அமைப்பைப் பற்றி விவரித்த அவர், படத்தின் முதல் பாதியை விஜய்யின் திரையுலக சாதனைகள் மற்றும் சினிமா பயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

திரையுலகில் உச்சம் தொட்ட விஜய், தீவிர அரசியலில் களமிறங்க எடுத்த முடிவை அந்தத் திரைப்படத்தின் முக்கிய இடைவேளைக் காட்சியாக வைப்பேன் என்று கூறிய இயக்குநர், இரண்டாம் பாதி முழுவதையும் அவரது அரசியல் பிரவேசம் மற்றும் மக்கள் சேவையை அடிப்படையாகக் கொண்டு அமைப்பேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இத்தகைய பயோபிக் திட்டங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக உருவாகவில்லை என்ற போதிலும், விஜய்யின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் எண்ணமே தமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக அஸ்வத் மாரிமுத்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். எச்.வினோத் இயக்கத்தில் உருவான தனது 69-வது திரைப்படமான 'ஜன நாயகன்' திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, விஜய் முழுநேர அரசியல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

மறுபுறம், கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த், சிம்ரன், ராஷி கண்ணா நடிக்கும் 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகளை அஸ்வத் மாரிமுத்து மேற்கொண்டு வருகிறார். இத்துடன் பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அவர் அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply