• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வான்கூவரில் வரலாறு காணாத மின்னல் தாக்கம்

கனடா

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த வார இறுதியில் வீசிய கடுமையான இடியுடன் கூடிய புயலின்போது, மெட்ரோ வான்கூவர் பகுதியில் 1,725 மின்னல் தாக்கங்கள் பதிவாகியுள்ளன.

சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நீடித்த இந்த புயல், தற்போது பயன்படுத்தப்படும் மின்னல் கண்காணிப்பு அமைப்பின் வரலாற்றில் மெட்ரோ வான்கூவர் பகுதியில் பதிவான அதிகபட்ச மின்னல் தாக்கமாக அமைந்துள்ளது.

கனடா சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் வானிலை ஆய்வாளர் ஜெனிபர் கோவல் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் அதிகபட்சமாக 869 மின்னல் தாக்கங்கள் பதிவாகியிருந்தன.

அது 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பதிவானதாக கோவல் கூறியுள்ளார். இந்த கோடைக்காலத்தில் முன்னதாக ஏற்பட்ட இடியுடன் கூடிய புயல்களில் முறையே 128 மற்றும் 139 மின்னல் தாக்கங்கள் மட்டுமே பதிவாகியிருந்தன.

இதனுடன் ஒப்பிடுகையில், அண்மைய புயல் மிகவும் தீவிரமாக இருந்ததாக வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இந்த புயலின்போது குறுகிய காலத்திற்குள் அதிகளவு மழையும் பெய்துள்ளது.

விமான நிலையப் பகுதியில் ஒரு மணி நேரத்தில் மட்டும் 24 மில்லிமீட்டர் மழை பெய்ததாக கோவல் தெரிவித்துள்ளார்.

இந்த புயல் வழக்கத்திற்கு மாறாக இருந்ததற்கு அது வந்த திசையும் முக்கிய காரணமாக அமைந்ததாக வானிலை ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக வான்கூவர் பகுதிக்கு மேற்கிலிருந்து அல்லது தென்மேற்கிலிருந்து ஈரப்பதம் கொண்ட காற்று வரும் நிலையில், இந்த முறை தெற்கிலிருந்து அதிக ஈரப்பதம் கொண்ட வெப்பமான காற்று வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அதிக மழை மற்றும் அதிகளவான மின்னல் தாக்கங்களுடன் கூடிய மிகவும் தீவிரமான புயல் உருவானதாக அவர் கூறியுள்ளார்.

இந்த மின்னல் தாக்கங்களில் ஒன்று லயன்ஸ் பே அருகே சிறிய காட்டுத்தீ ஏற்படுவதற்கும் காரணமாகியுள்ளது. 
 

Leave a Reply