பெண் தேடுவதில் 90ஸ் கிட்ஸ் சந்திக்கும் அவலங்கள் - விரைவில் திரைக்கு வரும் மிடில் கிளாஸ் மாப்பிள்ளை திரைப்படம்
சினிமா
முன்னணி சர்வதேச ஐடி நிறுவனங்களில் பணியாற்றிய பிரபு ஏகாம்பரம், சினிமாவின் மீதுள்ள தீராத காதல் காரணமாக, தற்போது ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ எனும் புதிய திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும், கதாநாயகனாகவும் தமிழ் திரையுலகில் தடம் பதிக்கிறார்.
இன்றைய காலகட்டத்தில் 90ஸ் கிட்ஸ் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று திருமணத்திற்குப் பெண் தேடுவது.
குறிப்பாக நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பெண் கிடைப்பதில் சந்திக்கும் சமூக மற்றும் பொருளாதாரச் சிக்கல்களை, நகைச்சுவை மற்றும் எதார்த்தமான சுவாரசியங்களுடன் இப்படம் பேசவுள்ளது.
ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இத்திரைப்படத்தில், பிரபு ஏகாம்பரத்திற்கு ஜோடியாக ஹரிபிரியா கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் பலர் நடித்துள்ளனர். இது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு தெரிவித்திருக்கிறது.
படம் குறித்துப் பேசிய இயக்குநர் மற்றும் கதாநாயகன் பிரபு ஏகாம்பரம் கூறியதாவது:
"இந்த படம் முழுக்க முழுக்க 90ஸ் கிட்ஸ்களின் பரிதாப நிலையை, குறிப்பாக அவர்களுக்குப் பெண் கிடைப்பதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை மையமாகக் கொண்டது.
ஒரு நடுத்தரக் குடும்பத்தின் வாழ்வியலையும், அவர்கள் அன்றாடம் கடந்து வரும் சூழலையும் அப்படியே திரையில் பிரதிபலிக்கும் வகையில், மக்கள் எளிதில் தங்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும் விதமாகப் படத்தை உருவாக்கியுள்ளோம்" என்று கூறினார்.
இத்திரைப்படத்திற்கு ரஷாந்த் ஆர்வின் இசையமைக்க, அபிஷேக் ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொண்டுள்ளார். படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அனைத்துப் பணிகளும் முடிந்து படம் விரைவில் திரைக்கு வரும் என்று படக்குழு தெரிவித்திருக்கிறது.





















