சர்வதேச தேடுதலுக்குப் பின் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சமித்புர சத்து
இலங்கை
குற்றச்செயல் அமைப்புகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சந்தேகநபரொருவர் ஓமானில் தலைமறைவாக இருந்த நிலையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். SouthAsians & Diaspora
சர்வதேச பொலிஸ் (Interpol) சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டிருந்த கங்கானமகே திமுது சதுரங்க பெரேரா (Kankanamage Dimuthu Chathuranga Perera) எனப்படும் “சமித்புர சத்து” இன்று (18) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
28 வயதுடைய மட்டக்குளியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், நீண்டகாலமாக ஓமானில் தலைமறைவாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் மீது கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன கொலைச் சம்பவத்திற்கு உதவி மற்றும் உடந்தையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பிலேயே அவருக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
மேலும், மட்டக்குளி பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற மற்றொரு கொலைச் சம்பவத்திற்கும் உதவி மற்றும் உடந்தையாக செயல்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அதற்காகவும் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கைக்குண்டொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டும் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தற்போது கொழும்பு மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





















