கனடாவில் அங்கீகரிக்கப்படாத எடைக் குறைப்பு மருந்து - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடா
அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமான எடைக் குறைப்பு மருந்து கருப்புச் சந்தையில் விற்கப்படுவது குறித்து முன்னணி மருந்து உற்பத்தியாளரான 'லில்லி கனடா' கனேடிய மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்நிறுவனம் சோதனைக் கட்டத்தில் வைத்துள்ள 'ரெடாட்ரூடைட்' என்ற மருந்து, இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெடாட்ரூடைட் மருந்து, ஹெல்த் கனடா அமைப்பாலோ அல்லது உலகளவில் வேறு எந்த ஒழுங்குமுறை ஆணையத்தாலோ மனித பயன்பாட்டிற்காக இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை.
எனவே, இதை கனடாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ சட்டப்பூர்வமாக விற்க முடியாது. எனினும், சர்வதேச அளவில் இதற்கான கருப்புச் சந்தை இயங்கி வருகிறது என லில்லி கனடா தெரிவித்துள்ளது.
அமெரிக்க மருந்து நிறுவனமான எலி லில்லி தயாரிக்கும் இந்த மருந்து, உடல் பருமன், டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் அது தொடர்பான பாதிப்புகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக உருவாக்கப்பட்டு வருகிறது.
தற்போது 3-ஆம் கட்ட மருத்துவப் பரிசோதனையில் உள்ள இம்மருந்து, உடல் எடையைக் குறைப்பதில் ஒரு "புரட்சிகரமான முன்னேற்றத்தை" வெளிப்படுத்தியுள்ளதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
80 வாரங்கள் நடத்தப்பட்ட மருத்துவ சோதனைகளில், டைப் 2 நீரிழிவு மற்றும் அதிக உடல் எடை கொண்ட நபர்கள் சராசரியாக 22.5 கிலோ (49.6 பவுண்ட்) வரை எடையைக் குறைத்துள்ளனர்.
மற்றொரு ஆய்வில், தீவிர உடல் பருமன் கொண்ட பெரியவர்கள் சராசரியாக 25.3 கிலோ (55.8 பவுண்ட்) எடையைக் குறைத்துள்ளது தெரியவந்துள்ளது.





















