உலகின் கவனத்தை ஈர்த்த இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் திட்டம்
இலங்கை
விருது பெற்ற ஹொலிவுட் நடிகையும், சர்வதேச கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கான தூதருமான ரோசமண்ட் பைக், இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் திட்டத்தின் முன்னேற்றத்தை பாராட்டியுள்ளார்.
வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்கவை ஆகஸ்ட் 10 ஆம் திகதி சந்தித்தபோது, நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடிய அவர், இத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக கண்ணிவெடிகள் காணப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் சுமார் 90 சதவீத நிலப்பரப்புகள் வெற்றிகரமாக சுத்திகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது சுமார் 20.8 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதிகள் மட்டுமே அகற்றப்பட வேண்டியுள்ளன.
இவை பெரும்பாலும் சிக்கலான மற்றும் கடினமான நிலப்பரப்புகளாக இருப்பதாகவும், அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் இலங்கையை முழுமையாக கண்ணிவெடி இல்லாத நாடாக அறிவிப்பதே இலக்காக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக விசேட பயிற்சி பெற்ற 500 இலங்கை இராணுவ வீரர்களை கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இராணுவம் ஆண்டுதோறும் சுமார் 1.5 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை சுத்திகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கு மேலாக ஏனைய அமைப்புகளும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுத்து வருகின்றன.
மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கான அரசின் நிதி ஒதுக்கீடு இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதற்கும், இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்திற்கும் ரோசமண்ட் பைக் தனது பாராட்டை வெளியிட்டார்.






















