தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா
இலங்கை
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று ஒலுவிலிலுள்ள ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த பிரதான கேட்போர் கூடத்தில் கோலாகலமாக ஆரம்பமானது.
மூன்று நாட்கள் நடைபெறும் இப்பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகத்தின் ஆறு பீடங்களைச் சேர்ந்த உள்வாரி மற்றும் வெளிவாரிப் பட்டப்படிப்பு மாணவர்கள் உட்பட மொத்தம் 3, 398 பட்டதாரிகளுக்கு ஒன்பது அமர்வுகளின் ஊடாக பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி பாயிஸ் முஸ்தபா முன்னிலையிலும், உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் தலைமையிலும் நடைபெறும் இவ்விழாவின் நிர்வாக ஒருங்கிணைப்பை பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் மேற்கொண்டு வருகின்றார்.
முதலாம் நாளான இன்று நடைபெற்ற முதல் அமர்வில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீடங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் அமர்வுகளில் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழிப் பீட மாணவர்களுக்கான பட்டமளிப்பு இடம்பெறவுள்ளது.
இன்றைய விழாவின் விசேட அம்சமாக மத்திய மாகாண ஆளுநரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான பேராசிரியர் சரத் அபேயகோன் பட்டமளிப்பு விசேட உரையாற்றவுள்ளார்.
நாளை (26) நடைபெறும் நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் அமர்வுகளில் பிரயோக விஞ்ஞானம் மற்றும் கலை கலாசாரப் பீட மாணவர்களுக்கும், ஜூலை 27ஆம் திகதி நடைபெறும் இறுதி மூன்று அமர்வுகளில் முகாமைத்துவம் மற்றும் வர்த்தகப் பீடத்தினருக்கும்இ வெளிவாரிப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
பொறியியல், தொழில்நுட்பவியல், இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழி, பிரயோக விஞ்ஞானம், கலை மற்றும் கலாசாரம், முகாமைத்துவம் மற்றும் வர்த்தகம் ஆகிய அனைத்து பீடங்களையும் உள்ளடக்கிய இம்முறை பட்டமளிப்பு விழா, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி விரிவாக்கத்தையும் உயர்கல்வித் துறையில் அதன் வளர்ச்சியையும் பிரதிபலிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.






















