அமெரிக்காவில் நெதன்யாகுவை எவராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது
இலங்கை
அமெரிக்க மண்ணில் நெதன்யாகு எந்த வடிவத்திலும், எவ்விதத்திலும் கைது செய்யப்பட மாட்டார்” என அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) பிடிவாரண்ட் அடிப்படையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவிற்கு வரும்போது அவரைக் கைது செய்வதற்கான சட்ட வழிகளை ஆராய்ந்து வருவதாக நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரன் மம்தானி கூறியிருந்த நிலையில்,நெதன்யாகுவை எவராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.
வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நியூயார்க் வரவுள்ள சூழலில், “காசாவில் போர்க்குற்றம் புரிந்த குற்றச்சாட்டிற்காக சர்வதேச நீதிமன்றத்தால் வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நெதன்யாகு தி ஹேக் (The Hague) சிறையில்தான் இருக்க வேண்டும்; நியூயார்க் சட்டப் பிரிவு அனுமதித்தால் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் மம்தானி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.
மம்தானியின் இந்த அதிரடி பேச்சு சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. மம்தானியின் கருத்துக்குத் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தின் வாயிலாகப் பதிலளித்துள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப்,
“நெதன்யாகு ஈரானின் தீவிரவாத ஆட்சிக்கு எதிராகப் போராடி வருகிறார். உண்மையில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் ஈரானை அழிவுப் பாதைக்குக் கொண்டுசென்ற அதன் தலைவர்களே தவிர நெதன்யாகு அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) உறுப்பு நாடு அல்ல என்பதால், அதன் பிடிவாரண்டுகளைச் செயல்படுத்தும் கடமை அமெரிக்காவிற்கு இல்லை என்பதை அதிபர் நிர்வாகம் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், ஒரு நாட்டின் தலைவரை மற்றொரு நாட்டின் உள்ளூர் மேயர் கைது செய்ய நினைப்பது சர்வதேச சட்ட விதிகளுக்கு எதிரானது என்றும், அது முற்றிலும் அரசியல் ஆதாயத்திற்காகச் செய்யப்படும் நாடகம் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
டிரம்பின் இந்தத் தீர்க்கமான அறிவிப்பின் மூலம், நியூயார்க் மேயர் மம்தானி கிளப்பிய நெதன்யாகு கைது குறித்த சர்ச்சைக்கும் சட்டப் போராட்டங்களுக்கும் அமெரிக்கக் கூட்டாட்சி அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.





















