சமூக உட்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் ஆராய்வு
இலங்கை
டித்வா சூறாவளியால் சேதமடைந்த சமூக உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் சீரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, ‘Rebuilding Sri Lanka’ ஜனாதிபதி செயலணியின் கீழ் நிறுவப்பட்ட உபகுழு, அதன் தலைவரான கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகேயின் தலைமையில் 5 ஆவது தடவையாக நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. இலங்கைவிடுதிகள் முன்பதிவு
டித்வா சூறாவளியால் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவது மற்றும் அதில் நிலவும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
கல்வி, சுகாதாரம், கலாசார உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொது வசதிகள் உள்ளிட்ட பல்வேறு சமூக உட்கட்டமைப்பு வசதிகளை அனர்த்தத்திற்குப் பின்னர் மீட்டெடுக்கும் பணிகளின் முன்னேற்றத்தை மேற்பார்வையிடுவதும், அது குறித்து பிரதான குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிப்பதும் இந்த உபகுழுவின் பொறுப்பாகும் என்றும், அதனால் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு காண்பதுடன் தேவையான சந்தர்ப்பங்களில் கொள்கை ரீதியான தீர்மானங்களைப் பெற்றுக்கொள்வதற்காகக் கொள்கை வகுப்பாளர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்குவது இந்த உபகுழுவின் பொறுப்பாகும் என்றும் அமைச்சர் உபாலி பன்னிலகே சுட்டிக்காட்டினார்.
அனர்த்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டதுடன் அந்த மாகாணங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மீட்டெடுக்கும் பணிகளின் முன்னேற்றத்தை மாகாண பிரதம செயலாளர்களும், பொது வசதிகளை மீட்டெடுப்பதன் முன்னேற்றத்தை உள்ளூராட்சி ஆணையாளர்களும் இணையவழி ஊடாக முன்வைத்தனர்.
உபகுழுவின் செயலாளரும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளருமான ஜே. ஆர். சி. ஜயதிலக்க, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, புத்தசாசன அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரினாயக்க, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் சாலிந்த பண்டார, ஊவா மாகாண தலைமைச் செயலாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ, நிதி ஆணைக்குழுவின் செயலாளர் ஏ. டி. எம். யு. டி. பி. தென்னகோன், தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் பணிப்பாளர் லக்ஷிகா சேனாரத்ன ஆகியோர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.





















