• Welcome to TamilsGuide
செய்திகள் 1

3-வது முறையாகத் திருமண பந்தத்தில் இணைந்த ஆமீர் கான் - காதலி கவுரி ஸ்ப்ராட்டை கரம் பிடித்தார்

சினிமா

பாலிவுட்டின் 'மிஸ்டர் பெர்ஃபெக்ட்' என்று அழைக்கப்படும் முன்னணி நடிகர் ஆமீர் கான்(61), இன்று தனது காதலியான கவுரி ஸ்ப்ராட்டை, மும்பை பாலி ஹில்லில் உள்ள அவரது இல்லத்தில் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு திரைப்படத் புரோமோசன் நிகழ்வில் பங்கேற்ற ஆமீர் கான், தனது திருமணச் செய்தியை ஊடகங்களிடம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார்.

"ஜூலை 5-ஆம் தேதி என் திருமணம் நடைபெறுகிறது. வீட்டிலேயே எளிய முறையில் இதனை நடத்துகிறோம். எங்கள் இரு குடும்பத்தினரும், சில முக்கிய நண்பர்களும் மட்டுமே இதில் பங்கேற்கின்றனர். உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்குத் தேவை" என்று அவர் தெரிவித்திருந்தார்.

பெங்களூரைச் சேர்ந்த கவுரி ஸ்ப்ராட், ஃபேஷன், அழகு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வரும் ஒரு தொழில்முனைவோர் ஆவார். தற்போது மும்பையில் வசித்து வரும் இவர், ஆமீர் கானிடம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நட்பில் உள்ளார்.

ஆரம்பத்தில் இவர்களுக்குள் இருந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது 60-வது பிறந்தநாளின் போது ஆமீர் கான், கவுரியை ஊடகங்களுக்குத் தனது துணையாக அறிமுகப்படுத்தினார்.

பாலிவுட்டின் வழக்கமான ஆடம்பரத் திருமணங்களைப் போலன்றி, இந்தத் திருமணம் முற்றிலும் தனிப்பட்ட முறையில் திட்டமிடப்பட்டு, ஆமீர் கான் மற்றும் கவுரி ஸ்ப்ராட் ஜோடி இன்று முறைப்படி தங்களது திருமணத்தைப் பதிவு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, அங்கு வருகை தரும் 100 முதல் 150 நெருங்கிய விருந்தினர்களுக்கு மணமக்களுக்குப் பிடித்த உணவுகளுடன் கூடிய பிரத்யேக மதிய விருந்து வழங்கப்படவுள்ளது. இத்திருமணத்தில் பாலிவுட்டின் பிரபல இயக்குநர்களான ராஜ்குமார் ஹிரானி, அசுதோஷ் கோவாரிகர், ராஜ்குமார் சந்தோஷி உள்ளிட்ட மிக முக்கியப் பிரபலங்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஆமீர் கானின் மூன்றாவது திருமணமாகும். ஆமீர் கானுக்கு அவரது முதல் மனைவி ரீனா தத்தா மூலம் பிறந்த ஜுனைத் கான், ஈரா கான் மற்றும் இரண்டாவது மனைவி கிரண் ராவ் மூலம் பிறந்த ஆசாத் ராவ் கான் ஆகிய மூன்று பிள்ளைகளும், கவுரி ஸ்ப்ராட்டுக்கு அவரது முந்தைய திருமணம் மூலம் பிறந்த ஒரு மகனும் இந்தத் திருமண நிகழ்வுகளில் முன்னின்று பங்கேற்கின்றனர்.

தற்போது ஆமீர் கானின் பாலி ஹில் இல்லம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, திருமணக் கொண்டாட்டங்கள் கலைகட்டியுள்ளன.

Leave a Reply