கனடாவில் பாதிக்கப்பட்டவரே குற்றவாளியான ஒரு வித்தியாசமான வழக்கு
கனடா
கனடாவில், இளம்பெண்ணொருவர் கொல்லப்பட்ட வழக்கில், உண்மையில், குற்றம் சாட்டப்பட்டவர்தான் பாதிக்கப்பட்டவர் என்று கூறியுள்ளார் அவரது சட்டத்தரணி.
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள லண்டன் நகரில், 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் திகதி கெய்ட்லின் ஜென்னிங்ஸ் (22) என்னும் இளம்பெண்ணின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து கெய்ட்லினை கொலை செய்ததாக, அவரது கணவரான டேவிட் யேட்ஸ் (52) என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கெய்ட்லினை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள டேவிட்தான் உண்மையில் பாதிக்கப்பட்டவர் என்று வாதம் முன்வைத்துள்ளார் அவரது சட்டத்தரணியான கஸாண்ட்ரா டிமெலோ.
அதாவது, ஜென்னிங்ஸ் டேவிடை கடுமையாகத் தாக்குவதுண்டாம். அடிக்கடி அவரது கழுத்தை நெறித்து டேவிடை மூச்சுத்திணற வைப்பதுண்டாம் கெய்ட்லின்.
அதனால் பலமுறை டேவிட் சுயநினைவிழந்துள்ளாராம். அதற்கு ஆதாரமாக வீடியோ ஒன்றும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தரப்பிலும் பொதுமக்கள் தரப்பிலும் மூன்று பேர் அது தொடர்பில் சாட்சியமும் அளித்துள்ளார்கள்.
கெய்ட்லின் டேவிடை முரட்டுத்தனமாக தாக்குவதும், பொலிசில் புகாரளிக்கப்படுவதும் பல மாதங்களாக தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், ஒரு நாள் தன்னைத் தாக்கிய கெய்ட்லினை திருப்பித் தாக்கியுள்ளார் டேவிட்.
இத்தனை மாதங்களாக கெய்ட்லின் கையால் அடியும் உதையும் மிதியும் அனுபவித்து வந்த நிலையில், திருப்பித் தாக்கிய டேவிடின் தாக்குதல் முரட்டுத்தனமாக இருந்ததால் கெய்ட்லின் உயிரிழந்துவிட்டார்.
அத்துடன், தான் தாக்கிய கோரத்தின் உண்மை நிலையை உணர்ந்துகொண்ட டேவிட், அது தற்காப்புக்காக என்னும் வாதம் நீதிமன்றத்தில் எடுபடாது என்பதை புரிந்துகொண்டுள்ளார்.
மேலும், கெய்ட்லின் இறந்துவிட்டார் என்பதை அறிந்ததால் ஏற்பட்ட துக்கம் மேலோங்க, தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ளவும் முயன்றுள்ளார் டேவிட்.
ஆக, தற்காப்புக்காக டேவிட் கெய்ட்லினை திருப்பித் தாக்கியது கொலையில் முடிந்துவிட்டதாக வாதம் வைத்துள்ள அவரது சட்டத்தரணியான கஸாண்ட்ரா டிமெலோ, தன் கட்சிக்காரருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கும்படி நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார். வழக்கு தொடர்கிறது.























